நோர்வேயில் 4,000 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு
Norway unearths 4,000-year-old grave site: நோர்வேயில் 4,000 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4,000 ஆண்டுகள் பழமையான கேலரி கல்லறை
நோர்வே நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஸ்வினேசுண்ட் பீடபூமியில் 4,000 ஆண்டுகள் பழமையான 'கேலரி கல்லறை' (Gallery Grave) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கல்லறை அகழாய்வுப் பணிகள் நடைபெறும்போது, ஆராய்ச்சியாளர்கள் திடீரென இந்த அரிய கல்லறையை கண்டுபிடித்தனர்.

இந்த கல்லறை கல் தகடுகள் மற்றும் பெரிய கற்களால் மிக அழகாக அமைக்கப்பட்டிருந்தது. அடிப்பகுதியில் சீராக அடுக்கப்பட்ட கற்கள் காணப்பட்டன. இது நோர்வேயின் ஆரம்ப கால விவசாயிகளால் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
பொதுவாக இத்தகைய கல்லறைகளில் பளிங்குக் கத்திகள் (Flint daggers) மற்றும் அம்புக்கோல்கள் கிடைப்பது வழக்கம். ஆனால் ஹால்டன் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கல்லறையில் ஒரு அம்புக்கோல் மட்டும் கிடைத்தது, கத்திகள் எதுவும் இல்லை.
இதனால், இது வழக்கமான போர்வீரர்களின் கல்லறை அல்ல, வேறு சமூகக் குழுவினருக்கானதாக இருக்கலாம் என்ற கருத்து எழுந்துள்ளது.
மேலும், சிறிதளவு கரி (charcoal) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது எரிந்த எலும்புகளின் சான்றாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதனால், இந்த கல்லறை சாதாரண அடக்கம் மற்றும் தகனம் ஆகிய இரண்டையும் இணைத்ததாக இருக்கலாம் என்ற சாத்தியம் உள்ளது.
கல்லறையில் அம்பர் மணிக்கல் மற்றும் கயிறு வடிவ அலங்காரம் கொண்ட பானை துண்டு ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் மனித எலும்புகள் எதுவும் கிடைக்கவில்லை. நோர்வேயில் இதுபோன்ற கல்லறைகள் மிகக் குறைவாகவே உள்ளன. ஸ்வீடனில் சுமார் 2,000 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், நோர்வேயில் 20 மட்டுமே உள்ளன.
இந்த கண்டுபிடிப்பு, நோர்வேயின் ஆரம்ப கால விவசாயிகள், அவர்களின் சமூக அமைப்பு, அடக்கம் முறைகள் மற்றும் மத நம்பிக்கைகள் குறித்து புதிய தகவல்களை வெளிப்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.