சவுதி பேச்சுவார்த்தை அமைதி ஒப்பந்தத்தை ஏற்கமுடியாது... ஜெலென்ஸ்கி திட்டவட்டம்
தங்கள் பங்களிப்பு இல்லாமல் முன்னெடுக்கப்படும் எந்த அமைதி ஒப்பந்தங்களையும் உக்ரைன் அங்கீகரிக்காது என்று அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அங்கீகரிக்க முடியாது
உக்ரைன் போர் குறித்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்காக ரஷ்ய மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் குழு சவுதி அரேபியாவில் சந்திக்கத் தயாராகி வரும் நிலையிலேயே ஜெலென்ஸ்கி தமது கருத்தை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார்.
உக்ரைன் இல்லாமல் உக்ரைன் தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தையையும் எந்த முடிவும் எட்டமுடியாத ஒன்றாக உக்ரைன் கருதுகிறது, மேலும் உக்ரைனால் அதை அங்கீகரிக்க முடியாது என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் ரஷ்யாவின் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ரஷ்ய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் குழு ரியாத்திற்கு பயணம் செய்தனர்.
ஆனால் குறித்த பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இப்படியான ஒரு பேச்சுவார்த்தையின் முடிவை உக்ரைன் கண்டிப்பாக ஏற்பதில்லை என்றே ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியதன் பின்னரே, போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
விட்டுக்கொடுப்பதாக இல்லை
உக்ரைன் மீது விளாடிமிர் புடின் போர் தொடுத்ததன் பின்னர், மூன்றாண்டுகளில் முதல் முறையாக ரஷ்ய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் குழு நேரிடையாக சந்தித்து விவாதிக்க உள்ளனர். இதன் ஒருபகுதியாக ட்ரம்ப் மற்றும் புடினும் நேரிடையாக சந்திக்கும் வாய்ப்புகளும் உருவாகியுள்ளது.
ரஷ்ய தரப்பில் இதை உறுதி செய்துள்ளனர். மேலும், அமைதிப் பேச்சுவார்த்தையின் போது உக்ரைனுக்கு பிராந்திய சலுகைகளை வழங்கும் நோக்கம் ரஷ்யாவிற்கு இல்லை என்றே ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித்தொடர்பாளர் Dmitry Peskov தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர் தொடங்கி 6 மாதங்களுக்கு பின்னர், செப்டம்பர் 2022 ல், உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரிஜியா பகுதிகளை கைப்பற்றியுள்ள ரஷ்யா, குறித்த பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொள்வதாக அறிவித்தது.
தற்போது இந்த விவகாரத்தில் விட்டுக்கொடுப்பதாக இல்லை என்றே ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவின் கருத்தை ஆதரிக்க இருப்பதாக கூறியுள்ள Dmitry Peskov, ஐரோப்பாவுக்கு பேச்சுவார்த்தையில் கண்டிப்பாக இடமளிக்க முடியாது என்றார்.
அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி மாகாணம் சென்றுள்ள ஜெலென்ஸ்கி, அங்கிருந்து புதன்கிழமை சவுதி அரேபியா பயணப்பட இருக்கிறார்.
ஆனால், சவுதி அரேபியா செல்லும் திட்டமானது ரஷ்ய-அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தைகளுடன் தொடர்புடையது அல்ல என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |