அணுஆயுத போர் நடைபெறும் என்று நான் நம்பவில்லை: ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்
துருக்கியின் அண்டலியா பகுதியில் உக்ரைன்-ரஷ்யா ஆகிய இருநாடுகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அணுஆயுத போர் நடைபெறும் என்று தான் நம்பவில்லை என தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்துவரும் போர் பதற்றத்தை தணிக்கும் விதமாக துருக்கியில் உள்ள அண்டலியா பகுதியில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்வும், உக்ரைனிய வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபாவும் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், அணுஆயுத போர் நடைபெறும் என்று தான் நம்பவில்லை என தெரிவித்தார்.
ரஷ்யாவின் கொம்மர்ஸன்ட் செய்தித்தாளின் கிரெம்ளின் நிருபர் ஒருவர் அணுஆயுத போரை ரஷ்யா முன்னெடுக்கும் என்று கேள்வியெழுப்பியதற்கு, அவ்வாறு நடைபெறும் என்று "நான் அதை நம்ப விரும்பவில்லை, நான் அதை நம்பவில்லை." என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், அணுஆயுத போரை பற்றி மேற்குநாடுகளே அதிகம் விவாதித்துவருவதாகவும், மனோ பகுப்பாய்வின் தந்தையான சிக்மண்ட் பிராய்டைப் போல மேற்கு நாடுகளே மீண்டும் அணுஆயுத போரை குறித்து பேசி அவற்றிக்கு திரும்புவதாகவும் தெரிவித்த அவர், இது ரஷ்யாவிற்கு கவலை தருவதாகவும் தெரிவித்தார்.
தற்போது மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளால் ரஷ்யாவிற்கு ஏற்பட்டுள்ள அனைத்து நெருக்கடிகளில் இருந்தும் விரைவில் புதிய மனோபலத்துடன் மீண்டு வருவோம் என்றும், மேற்கு நாடுகள் ரஷ்யாவின் நம்பகமான கூட்டாளி என்ற மாயை தங்களிடம் இருக்காது எனவும் தெரிவித்தார்.
மேலும் மேற்கு நாடுகளை சார்ந்து இல்லாமல் இருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ரஷ்யா முன்னெடுக்கும் எனவும் ரஷ்யாவின் எரிசத்திகளை வாங்குமாறு எந்தவொரு நாட்டையும் ரஷ்யா கட்டாயப்படுத்தாது எனவும் தெரிவித்தார்.
1991ன் சோவியத் யூனியன் பிரிவிற்கு பிறகு ரஷ்யாவிற்கு மேற்கு நாடுகளுக்கும் இடையிலான பனிப்போர் முடிவுபெற்றதாக கருதப்பட்டுவந்த நிலையில் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடையால் தற்போது மீண்டும் பனிப்போர் உருவாகியுள்ளது.