போராட்டக்காரர்களை தாக்கவேண்டாம்... மியான்மரில் பொலிசார் முன் மண்டியிட்ட கன்னியாஸ்திரீ: ஒரு நெகிழ்ச்சி சம்பவம்
மியான்மரில் போராட்டக்காரர்களை தாக்கவேண்டாம் என்று கூறி கன்னியாஸ்திரீ ஒருவர் பொலிசார் முன் மண்டியிட்ட சம்பவம் காண்போரை நெகிழ வைத்துள்ளது.
மியான்மரின் Myitkyina என்ற இடத்தில், ஆயுதம் தாங்கிய பொலிசார் முன் மண்டியிட்ட Ann Roza என்ற கன்னியாஸ்திரீ, போராட்டக்காரர்களை தாக்கவேண்டாம் என அவர்களிடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டார்.
பிப்ரவரி 28ஆம் திகதி, ஏற்கனவே அவர் மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரையும் கொடுக்கத் தயார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று மீண்டும் அவர் பொலிசார் முன் மண்டியிட்டு, யாரையும் சுடவேண்டாம் என்றும், கட்டாயம் அதை செய்துதான் ஆகவேண்டுமானால், தன்னை தாண்டிதான் செல்லவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால், பொலிசாரும் அவர் முன் மண்டியிட்டு, போராட்டத்தை நிறுத்த தங்களுக்கு வேறு வழியில்லை என்றும், தாங்கள் அதை செய்துதான் ஆகவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
அதன் பின், கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் தனக்கு மயக்கம் வந்ததாகவும், தான் மயங்கி விழும்போது ஒருவர் சுடப்பட்டு கீழே விழுந்ததைக் கண்டதாகவும் தெரிவிக்கிறார் Ann Roza.
யார் அவரை சுட்டது என்பது தனக்குத் தெரியாது என்று கூறிய அவர், கட்டாயம் தான் போராட்டக்காரர்களை தாக்கவேண்டாம் என்று யாரிடம் கேட்டுக்கொண்டேனோ, அவர்கள் அவரை சுட்டிருக்க மாட்டார்கள் என நம்புவதாக தெரிவித்தார்.

