Nvidia-வில் பல மில்லியன் டொலர் முதலீடு... பின்னர் சக்திவாய்ந்த AI ஆயுதத்தை சீனாவுக்கு வழங்கிய ட்ரம்ப்
Trump Changed China Policy And Made Profit: ட்ரம்ப் சீனாவுடனான கொள்கையை மாற்றியமைத்து லாபம் ஈட்டினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது நிர்வாகம் சீனாவிற்கு மேம்பட்ட AI சிப்களை விற்பனை செய்வதற்கு என்விடியா நிறுவனத்திற்கு வழிவகுக்கும் முக்கிய முடிவுகளை எடுத்திருந்த சமயத்தில், மில்லியன் கணக்கான டொலர் மதிப்புள்ள Nvidia பங்குகளை வாங்கியுள்ளார்.
என்விடியாவுக்கு சாதகமாக
அமெரிக்காவில் ஊழல் எதிர்ப்பு அமைப்பு ஒன்றின் பகுப்பாய்வு தொடர்புடைய விடயங்களைக் கண்டறிந்துள்ளது. மே 2025 இல் சீனாவிற்கு மேம்பட்ட அமெரிக்க AI சிப்களை ஏற்றுமதி செய்வதைக் கட்டுப்படுத்தும் ஜோ பைடன் கால விதிமுறைகளை ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு அவர் 1 மில்லியன் முதல் 5 மில்லியன் டொலர் மதிப்புள்ள என்விடியா பங்குகளை வாங்கியதாக ட்ரம்பின் நிதி அறிக்கைகள் காட்டுகின்றன.

இந்த நடவடிக்கைகள், நலன்களுக்கிடையிலான முரண்பாடு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன; ஏனெனில், கொள்கையில் கொண்டுவரப்பட்ட இந்த மாற்றம், உலகின் மிகப்பெரிய சிப் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான என்விடியாவுக்கு (Nvidia) சாதகமாக அமைந்தது.
ட்ரம்பின் நிதிநிலை அறிக்கைகளை ஆய்வு செய்த DeKleptocracy எனும் ஊழல் எதிர்ப்பு அமைப்பு, இந்த முதலீடுகளைச் சுட்டிக்காட்டியது. அமெரிக்க ஜனாதிபதி ஆப்பிள், மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பிற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களிலும் பங்குகளை வாங்கியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விதி, அமெரிக்காவின் மிகவும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை சீனா அணுகுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
AI Diffusion Framework என்று அழைக்கப்படும் இது, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதையும், செயற்கை நுண்ணறிவுத் துறையில் அமெரிக்காவின் முன்னிலையைத் தக்கவைத்துக் கொள்வதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.
மேம்பட்ட அமெரிக்க சிப்புகளைப் பயன்படுத்தி, சீனா மிகவும் சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்கி, இறுதியில் அமெரிக்காவை முந்திவிடக்கூடும் என்பதே அந்த திட்டத்தின் முக்கிய கவலைகளில் ஒன்றாக இருந்தது.
இந்த நிலையில், தேச நலனைப் பொருட்படுத்தாத ட்ரம்ப் நிர்வாகம் 2025 மே மாதத்தில் அந்த விதிமுறைகளை ரத்து செய்தது; இதன் மூலம், என்விடியா (Nvidia) நிறுவனம் தனது சிப்களை சீனாவுக்கு விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்தக்கூடிய தடைகள் நீக்கப்பட்டன.
ஆறு மடங்கு அதிக திறன்
வரலாற்று ரீதியாகவே சீனா Nvidia நிறுவனத்தின் ஒரு முக்கிய சந்தையாக இருந்து வருகிறது. 2010 முதல் 2022 வரை என்விடியாவின் விற்பனையில் ஏறக்குறைய கால் பங்கு சீனாவிலிருந்து கிடைத்தது.
ட்ரம்ப் தனது கொள்கை மாற்றத்தை அறிவித்த சிறிது நேரத்திலேயே, என்விடியா (Nvidia) நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு உயர்ந்தன. இதற்கு முன்பாகவே, ட்ரம்ப் அந்த நிறுவனத்தின் பல மில்லியன் டொலர் மதிப்பிலான பங்குகளை வாங்கியிருந்தார்.

2025-ஆம் ஆண்டு டிசம்பரில், என்விடியா நிறுவனம் தனது H200 சிப்களைச் சீனாவுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என்று ட்ரம்ப் அறிவித்தார். 2026-ஆம் ஆண்டு ஜனவரியில் வர்த்தகத் துறை இதற்கு ஒப்புதல் அளித்தது.
ட்ரம்பின் இந்த அதிரடி முடிவு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. H200 என்பது என்விடியாவின் மிகவும் மேம்பட்ட AI சிப்களில் ஒன்றாகும். இது, அந்த நேரத்தில் சீனாவில் புழக்கத்தில் இருந்து வந்த சிப்களை விட சுமார் ஆறு மடங்கு அதிக திறன் கொண்டதாக இருந்தது.
இந்த நிலையில், வெளிவிவகாரக் கொள்கை மற்றும் சர்வதேச உறவுகளில் கவனம் செலுத்தும் அமெரிக்க சிந்தனைக் குழுவான வெளிவிவகாரக் கவுன்சில், இந்த விற்பனையை அனுமதிப்பது சீனாவின் எதிர்கால செயற்கை நுண்ணறிவுத் தொழிற்சாலைகளுக்குப் பெரும் உத்வேகம் அளித்து, ஒரு முக்கிய அமெரிக்கப் போட்டியாளரை வலுப்படுத்தும் என்று எச்சரித்தது.

இருப்பினும், H200 தொடர்பான முடிவை அறிவித்த சில நாட்களுக்குள் ட்ரம்ப் குறைந்தது மூன்று முறை என்விடியா நிறுவனப் பங்குகளை வாங்கியுள்ளது வெளிச்சத்திற்கு வந்தது. ஒவ்வொரு பரிவர்த்தனையின் மதிப்பும் 250,001 டொலருக்கும் 500,000 டொலருக்கும் இடைப்பட்டதாக இருந்தது.
ஆனால், ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு Nvidia நிறுவனத்தின் பங்குகள் தொடர்பான பல பரிவர்த்தனைகளை மேற்கொண்டிருந்ததும் தெரிய வந்தது. இந்த நிலையில், Nvidia மற்றும் ஒட்டுமொத்த செயற்கை நுண்ணறிவு துறைக்கும் பயனளிக்கக்கூடிய முடிவுகளில், ட்ரம்ப்பின் தனிப்பட்ட நிதி நலன்கள் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடுமா என்ற கேள்வியை DeKleptocracy அமைப்பு எழுப்பியுள்ளது.
மேலும், ஒரு செயற்கை நுண்ணறிவு நிறுவனத்திற்குச் சாதகமாக, வெள்ளை மாளிகையின் கொள்கைகளில் சீன உளவாளி ஒருவர் செல்வாக்கு செலுத்துவதாகக் கூறப்படும் கவலைகளுடன் அந்தக் குழு இதை ஒப்பிட்டுள்ளது. ஜனாதிபதியின் சொந்த நிதி ஆதாயம் தேடும் நோக்கம் சமமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் DeKleptocracy அமைப்பு வாதிட்டுள்ளது.