ஜெயலலிதா புடவை இழுக்கப்பட்டது உண்மை! தமிழக முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு புடவை இழுக்கப்பட்ட சம்பவம் பொய் என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் பேசியது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை.அது, அவரால் நடத்தப்பட்ட நாடகம் என்பது அவையில் இருந்த அனைவருக்கும் தெரியும்.
இந்த மாதிரி ஒரு சம்பவத்தை சட்டமன்றத்தில் நிகழ்த்த வேண்டும் என்று ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் ஒத்திகை பார்த்துள்ளார்" எனக் கூறினார்.
ஓ.பன்னீர்செல்வம் பதில்
இதற்கு கண்டனம் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில்,"மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெண்கள் எங்கு இழிவுபடுத்தப்பட்டாலும் அதனை கடுமையாக ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதில் அரசியல் இருக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.
மேலும் , தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஜெயலலிதா தி.மு.க.வினரால் அவமானப்படுத்தப்பட்டதையும், அவருடைய புடவை இழுக்கப்பட்டதையும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு வந்தால் முதலமைச்சராகத்தான் திரும்ப வருவேன் என்று ஜெயலலிதா சபதம் எடுத்ததையும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்றதையும் குறிப்பிட்டார். இது உண்மையிலே நடைபெற்ற சம்பவம்.
ஆனால், இந்தச் சம்பவம் நாடகம் என்று தி.மு.க. உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கூறினர். இதுகுறித்து ஒரு நாளிதழுக்கு பேட்டியளித்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இதுபோன்ற நிகழ்வு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிகழவில்லை என்றும், அன்று சட்டமன்றத்தில் இருந்தவர்களுக்கு இது ஒரு நாடகம் என்பது தெரியும் என்றும் பேட்டியளித்து இருக்கிறார். நடந்த சம்பவத்தை, நடந்த உண்மையை திரித்துப் பேசுவது கடும் கண்டனத்திற்குரியது.
தீய நோக்கத்தோடும் திட்டமிட்டு சிலவற்றை மறைப்பதற்காகவும் செய்யப்பட்ட இடைச்செருகல் வேலை; மோசடி என்று அப்போதைய சட்டப்பேரவைத்தலைவர் தீர்ப்பளித்திருப்பதையும் தி.மு.க. தலைவருக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |