ஒடிசா ரயில் விபத்துக்கு காரணம் என்ன, காரணமானவர்கள் யார்? ரயில்வே அமைச்சர் தகவல்
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நடந்த சோகமான ரயில் விபத்து எலக்ட்ரானிக் இன்டர்லாக் மாற்றத்தால் நிகழ்ந்தது என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஒடிசா ரயில் விபத்து
வெள்ளிக்கிழமை மாலை ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்னை நோக்கிச் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹவுரா செல்லும் எஸ்எம்விபி-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய பயணிகள் ரயில்கள் பெரும் விபத்தில் சிக்கியது.
இதில் 275 பேர் இறந்தனர் மற்றும் 1,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Reuters
விபத்து நடந்த இடத்துக்குச் சென்று சீரமைப்புப் பணிகளைக் கண்காணித்து வந்த அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணையை முடித்து விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பார்.
விசாரணை அறிக்கை வரட்டும், ஆனால் சம்பவத்திற்கான காரணத்தையும் அதற்கு காரணமானவர்களையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம். எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட மாற்றங்களால் இது நடந்தது" என்று கூறினார்.
PTI
மேலும், "எலக்ட்ரானிக் இன்டர்லாக் மாற்றத்திற்கு யார் காரணம் என்பது விசாரணையின்போது தெரியவரும்," என்று அவர் கூறினார்.
கவாச் பொருத்தப்படாததற்கும் விபத்துக்கும் தொடர்பு இல்லை
எவ்வாறாயினும், கவாச் (Kavach) அல்லது மோதல் எதிர்ப்பு சாதனம் பொருத்தப்படாததற்கும் விபத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
AFP
விபத்து நடந்த இடத்தை சனிக்கிழமை ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி, சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், புதன்கிழமை காலைக்குள் சீரமைப்புப் பணிகள் நிறைவடையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.