நெருப்பு கோளமான எண்ணெய் டேங்கர்... உடல் கருகி பலியான 94 பேர்கள்
நைஜீரியாவில் எண்ணெய் டேங்கர் ஒன்று விபத்தில் சிக்கி, மொத்தமாக வெடித்ததில் குறைந்தது 94 பேர்கள் உடல் கருகி பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நெருப்பில் சிக்கிக் கொண்டனர்
ஜிகாவாவில் பரபரப்பான பிரதான சாலையில் லொறி சாரதி கட்டுப்பாட்டை இழக்க, எண்ணெயுடன் டேங்கர் தலைகீழாக சரிந்தது. இதனால் சாலை முழுவதும் எண்ணெய் கொட்டியது.
அடுத்த நொடி வெடித்துச் சிதறி தீ கோளமாக மாறியது. இந்த நிலையில் சாலையில் கொட்டிய எண்ணெயை சேகரிக்க சென்ற மக்கள், நெருப்பில் சிக்கிக் கொண்டனர் என்றே கூறப்படுகிறது.
இதில் 94 பேர்கள் உடல் கருகி மரணமடைந்துள்ளதுடன், இன்னொரு 50 பேர்கள் காயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தை ஜிகாவா பகுதி பொலிஸ் செய்தித்தொடர்பாளரும் உறுதி செய்துள்ளார்.
எண்ணிக்கை அதிகரிக்கும்
இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது. செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில் நடந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களை மொத்தமாக உலுக்கியுள்ளது.
செப்டம்பரில், நைஜீரியாவின் வட-மத்திய நைஜர் மாநிலத்தில் எரிபொருள் டேங்கர் ஒரு பெரிய டிரக் மீது மோதியதில் 48 பேர் கொல்லப்பட்டனர். 2020ல் மட்டும் எண்ணெய் டேங்கர் விபத்தில் சிக்கிய விவகாரத்தில் 535 பேர்கள் மரணமடைந்துள்ளனர்.
1,142 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். இந்த ஒரே ஆண்டில் 1,531 எண்ணெய் டேங்கர்கள் விபத்தில் சிக்கியுள்ளது. மோசமான சாலை, கட்டுப்பாடற்ற சாரதிகள் மற்றும் வழக்கமான வாகன பராமரிப்பு இல்லாதது உள்ளிட்டவையே விபத்துக்கு காரணம் என நிபுணர்கள் தரப்பு தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |