ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப்
ஹார்முஸ் நீரிணை அருகே குவைத்தின் மிகப்பெரிய எண்ணெய் கப்பல் ஒன்று ஈரானிய ட்ரோன்களால் தாக்குதலுக்கு இலக்கான அதே வேளையில், அமெரிக்கா ஈரானிய ஆயுதக் கிடங்கு மீது குண்டுவீச்சு நடத்தியுள்ளது.
அமெரிக்க அதிகாரிகள் உறுதி
ஈரானிய ஆயுதக் கிடங்கு மீது குண்டுவீச்சு நடத்தியுள்ள காணொளியை தமது ட்ரூத் சமூக ஊடகத்தில் டொனால்ட் ட்ரம்ப் பதிவு செய்துள்ளார். அதில் 2,000 பவுண்டு குண்டுகளை வீசி இரவு வானில் தொடர்ச்சியான வெடிப்புகளை ஏற்படுத்தியது பதிவாகியுள்ளது.

ஈரானின் Isfahan பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் அதுவென அமெரிக்க அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளதுடன், பதுங்குகுழிகளைத் தகர்க்கும் குண்டுகளை அமெரிக்காப் பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.
நாசாவின் செயற்கைக்கோள்களில் பதிவான தரவுகளின் அடிப்படையில், ஈரானின் இராணுவ நிலைகள் இருப்பதாக நம்பப்படும் பகுதியான சோஃபே மலைக்கு அருகே இந்த குண்டுவீச்சு நடந்துள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடைபெற்ற 12 நாள் போரின்போது அமெரிக்காவால் குண்டுவீசித் தாக்கப்பட்ட மூன்று யுரேனியம் செறிவூட்டும் தளங்களில் ஒன்று இஸ்பஹானில் அமைந்துள்ளது.
ஆனால், அதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில், இஸ்பஹானில் பெருத்த சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றே அம்பலமானது. ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளங்கள் அனைத்தும் அமெரிக்காவின் குண்டுவீச்சுக்கு எட்டாத ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ஈரானின் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் ஒரு பகுதி அங்கு புதைந்திருப்பதாக நம்பப்படுகிறது - அதனைத் தரைப்படைகளைக் கொண்டு கைப்பற்ற முடியும் என ட்ரம்பும் அமெரிக்காவும் நம்புகிறது.

2 மில்லியன் பீப்பாய்
திங்களன்று துபாய் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்தபோது ஈரானியத் தாக்குதலுக்கு உள்ளான, முழுமையாக ஏற்றப்பட்ட குவைத் கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரானிய ட்ரோன் தாக்குதலில் கப்பலின் உள்கட்டமைப்பு சேதமடைந்ததுடன், எண்ணெய் கசிவு ஏற்படக்கூடும் என்ற கவலைகளும் எழுந்துள்ளன. பிப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை அருகே தாக்குதலுக்கு இலக்காகும் இன்னொரு கப்பலாகும் இந்த Al Salmi.

ட்ரோன் தாக்குதலை அடுத்து கப்பலில் இருந்த 24 ஊழியர்களும் மீட்கப்பட்டுள்ளனர். வெளியான தரவுகளின் அடிப்படையில், Al Salmi கப்பலில் குவைத் மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து 2 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றப்பட்டிருந்தது.
சீனாவின் Qingdao பகுதிக்கு புறப்பட காத்திருந்த நிலையிலேயே தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பில் ஈரான் தரப்பில் இருந்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்பதுடன், ஈரான் தாக்குதல் நடத்தியதாக இன்னும் சுயாதீனமாகவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |