ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை விற்ற வீராங்கனை! நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்
போலந்தில் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற வீராங்கனை அந்த பதக்கத்தை ஒரு குழந்தையின் அறுவைச் சிகிச்சைக்காக விற்றுள்ளார்.
ஒலிம்பிக் பதக்கம் வெல்வது என்பது பல விளையாட்டு வீரர்களின் கனவாக இருக்கலாம். ஆனால், ஒரு குழந்தையின் இதய அறுவைச் சிகிச்சைக்காக, டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் வென்ற வெள்ளிப் பதக்கத்தை விற்க முன்வந்துள்ளார் ஒரு விளையாட்டு வீராங்கனை.
போலந்தைச் சேர்ந்த 25 வயது மரியா மாக்டலினா (Maria Magdalena Andrejczyk), ஒலிம்பிக்கில், ஈட்டி எறிதல் (javelin) போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
சென்ற வாரம் மரியா அதை விற்கப்போவதாகவும், அதிலிருந்து கிடைக்கும் தொகை, Miloszek Malysa எனும் 8 மாதக் குழந்தையின் இதய அறுவைச் சிகிச்சைக்கு வழங்கப்படும் என்றும் தமது Facebook பக்கத்தில் குறிப்பிட்டார்.
போலந்தில் சுமார் 7,000 கடைகளை வைத்துள்ள மிகவும் பிரபலமான பல்பொருள் அங்காடி நிறுவனமான Zabka, அந்த வெள்ளிப் பதக்கத்திற்கு 125,000 டொலர் கொடுத்து வாங்கியது. ஆனால், பதக்கத்தை மரியாவே வைத்துக்கொள்ளலாம் என Zabka நிறுவனம் கூறிவிட்டது.
மரியாவின் உன்னதமான, அழகான செயல், நெகிழச் செய்துள்ளதாக அந்நிறுவனம் தனது Facebook பக்கத்தில் கூறியுள்ளது. மேலும், மரியா மாக்டலினாவின் இந்த நெகிழவைக்கும் செயலை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.