முந்தைய மாறுபாடுகளை விட ஓமிக்ரான் நீண்ட நேரம் உயிர்ப்புடன் இருக்கிறது! ஆய்வில் கண்டறியப்பட்ட உண்மை
கொரோனாவின் முந்தைய மாறுபாடுகளுடன் ஒப்பிடும்போது ஓமிக்ரான் பிளாஸ்டிக் மற்றும் தோலில் நீண்ட காலம் உயிர்ப்புடன் இருக்கிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவின் வுஹானில் கண்டுபிடிக்கப்பட்ட அசல் திரிபை விட கொரோனாவின் புதிய மாறுபாடு மிக நீண்ட காலம் உயிர்ப்புடன் இருப்பதை கண்டறிந்துள்ளதாக ஜப்பானில் உள்ள Kyoto Prefectural University of Medicine-ஐ சேர்ந்த குழு தெரிவித்துள்ளது.
பிளாஸ்டிக் பரப்புகளில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனைகளைத் தொடர்ந்து, அசல் திரிபு மற்றும் ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா மாறுபாடுகளின் உயிர்ப்புடன் இருக்கும் நேரம் முறையே 56 மணிநேரம், 191.3 மணிநேரம், 156.6 மணிநேரம், 59.3 மணிநேரம் மற்றும் 114 மணிநேரம் என்று அவர்கள் கூறினர்.
ஆனால் பிளாஸ்டிக் பரப்புகளில் ஓமிக்ரான் மாறுபாடு 193.5 மணிநேரம் உயிர்ப்புடன் இருக்கிறது, இது எட்டு நாட்கள் ஆகும்.
இதற்கிடையில், சடலங்களின் தோல் மாதிரிகள் அசல் மாறுபாடு 8.6 மணிநேரமும், ஆல்பா 19.6 மணிநேரமும், பீட்டா 19.1 மணிநேரமும், காமா 11 மணிநேரமும், டெல்டா 16.8 மணிநேரமும் , ஓமிக்ரான் 21.1 மணிநேரமும் உயிர்ப்புடன் இருந்ததாகக் காட்டுகிறது.
பிளாஸ்டிக் மற்றும் தோல் பரப்புகளில், ஆல்பா, பீட்டா, டெல்டா மற்றும் ஓமிக்ரான் வகைகள் வுஹான் திரிபை விட இரண்டு மடங்கு அதிகம் உயிர்ப்புடன் இருக்கும் நேரத்தை வெளிப்படுத்துகின்றன என ஆசிரியர்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.