வேகமாக பரவும்.. Omicron வைரஸின் புதிய மாறுபாடு குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
Omicron வைரஸின் புதிய மாறுபாடான BA.2 திரிபு குறித்து விஞ்ஞானிகள் சில முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. கொரோனா காரணமாக கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் Omicron பரவல் குறித்து அடுத்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
Omicron மாறுபாட்டின் புதிய திரிபு 40க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் RT-PCR சோதனையில் கூட இந்த திரிபு இருப்பதை கண்டறிய முடியாது.
இதனால் ஐரோப்பா முழுவதும் பாதிப்பு தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. BA.1 திரிபை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.
BA.1 திரிபு, சில சமயங்களில் RT-PCR சோதனைகளில் இருந்து தப்பிக்கக்கூடும் என்றாலும் இந்த சோதனைகள் வைரஸை கண்டறிவதில் இன்னும் சிறந்த தரநிலையை கொண்டிருப்பதாக பிரான்ஸ் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இங்கிலாந்து மற்றும் டென்மார்க் தவிர ஸ்வீடன், நார்வே மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் BA.2 திரிபின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.