உலகில் நான்கில் ஒருவருக்கு இந்த பிரச்சினை ஏற்படும்! உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை!
உலக மக்கள்தொகையில் நான்கில் ஒருவர் 2050-க்குள் செவிப்புலன் பிரச்சினையால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு கடுமையாக எச்சரித்துள்ளது.
காது கேளாமை குறித்து முதல் முதலில் வெளியான உலகளாவிய அறிக்கையாகும். செவி திறன் பிரச்சினை உள்ளவர்களுக்கு பேசும் திறனிலும் சிக்கல்கள் இருப்பது இயல்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரச்சினை மேலோங்காமல் இருக்க, உடனடியாக அதற்கான தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளில் கூடுதல் முதலீடு செய்ய வேண்டும் என்று உலக நாடுகளுக்கு WHO இன்று அழைப்பு விடுத்துள்ளது.
இதன்முலம் தொற்றுகள், நோய்கள், பிறப்பு குறைபாடுகள், சத்த வெளிப்பாடு மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் போன்ற பல சிக்கல்களுக்கான காரணங்களைத் தடுக்க முடியும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை நடவடிக்கைகளின் தொகுப்பை முன்மொழிந்த சுகாதார அமைப்பு, இதற்கு வருடத்திற்கு ஒரு நபருக்கு 1.33 டொலர் செலவாகும் என்று கணக்கிட்டுள்ளது.
இந்த பிரச்சினை சரியாக கவனிக்கப்படவில்லை என்பதால், ஒவ்வொரு ஆண்டும் டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவழிக்கப்படுவதாக கூறியுள்ளது.
இந்த பிரச்சினை குறித்து செயல்படத் தவறினால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான செலவுகளை விட பாதிக்கப்பட்டவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கான செலவுகள் விலை உயர்ந்ததாக இருக்கும்,
மேலும் தகவல் தொடர்பு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றிலிருந்து அவர்கள் விலக்கப்படுவதால் ஏற்படும் நிதி இழப்புகள் அதிகரிக்கும் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
தற்போது உலகளவில் ஐந்து பேரில் ஒருவருக்கு செவிப்புலன் பிரச்சினை உள்ளது.
ஆனால், அடுத்த மூன்று தசாப்தங்களில் காது கேளாமை பிரச்சினை உள்ளவர்களின் எண்ணிக்கை 1.5 மடங்கிற்கும் மேலாக அதிகரிக்கக்கூடும் என்று அறிக்கை எச்சரித்துள்ளது.
இப்படியே போனால், 700 மில்லியன் மக்களுக்கு 2050-ஆம் ஆண்டில் ஒருவிதமான சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு தீவிரமான நிலையைக் கொண்டிருக்கும் என கடுமையாக எச்சரித்துள்ளது.

