அவர்களுக்கு மட்டும் ஒரு டோஸ் கொரோனா மருந்து போதும்: முதல் நாடாக பிரான்ஸ் எடுத்த முக்கிய முடிவு
பிரான்சில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி மட்டும் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த முடிவால், பல மில்லியன் எண்ணிக்கையிலான டோஸ்களை மிச்சப்படுத்துவதுடன், தேவையானோருக்கு அதை அளிக்கவும் முடியும் என கூறப்படுகிறது.
மட்டுமின்றி, உரிய நேரத்தில் போதுமான கொரோனா தடுப்பூசிகள் கிடைப்பதில் ஐரோப்பிய நாடுகள் திணறிவரும் நிலையில் உலகின் முதல் நாடாக பிரான்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.
கொரோனா பாதிப்பு ஏற்கனவே ஏற்பட்டு, குணமடைந்தவர்களுக்கு இயற்கையாகவே நோயெதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கும் எனவும், அவர்களுக்கு ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி அளித்தால் போதுமானது எனவும் பிரான்ஸ் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த ஓராண்டில் பிரான்சில் மட்டும் 3.4 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
தற்போது ஒரு டோஸ் மட்டும் போதுமானது என்ற முக்கிய முடிவானது, கொரோனா தடுப்பூசி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு பெரிய தீர்வாக அமையும் என்கிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றிய அனுமதி அளித்துள்ள மூன்று நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசியும், இரண்டு டோஸ்கள் அளிக்கப்பட வேண்டும் என்றே அறிவுறுத்துகின்றன.
ஆனால், வெளிவரும் தரவுகள், ஏற்கனவே ஒரு முறை தொற்றுநோயை எதிர்த்துப் போராடியவர்களில் ஒற்றை டோஸ் மருந்தானது மிகவும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் காட்டுகிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
59 சுகாதார ஊழியர்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஒற்றை டோஸ் சோதனையில், இரண்டு டோஸ் எடுத்துக் கொண்டவர்களைவிட அவர்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி காணப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளித்து 6 வாரங்கள் கடந்துள்ள நிலையில், பிரான்சில் வெறும் 2 மில்லியன் மக்கள் மட்டுமே தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஆனால் பிரித்தானியாவில் இந்த எண்ணிக்கையானது 13.5 மில்லியன் என தெரிய வந்துள்ளது.
இது இவ்வாறிருக்க, பிரான்ஸ் மக்களில் 44% பேர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதில்லை என தெரிவித்துள்ளனர்.
ஆனால் பிரித்தானியாவை பொருத்தமட்டில், 78% மக்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர். டென்மார்க்கில் இந்த எண்ணிக்கை 67% என உள்ளது குறிப்பிடத்தக்கது.