தலைவர் பதவியை பெற்றதில் இருந்து தோல்வியை சந்திக்காத ஒரே நபர் இவர் தான் - வெளியான அறிக்கை
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பதவியை பெற்றதில் இருந்து இன்று வரையில் நடைபெற்றுள்ள அனைத்து தேர்தலிலும் தோல்வியை பெறாத சிறப்பை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுள்ளார். இது தொடர்பான ஓர் அறிக்கையும் திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
வெளியான அறிக்கை
“முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு மறைந்த பிறகு திமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்த சில மாதங்களிலேயே 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள நேர்ந்தது.
திமுக தலைவரான பின்னர் சந்தித்த முதல் தேர்தலிலேயே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 39 இடங்களில் திமுக கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின் வெற்றியை தேடித் தந்தார். 2019 நாடாளுமன்ற தேர்தல், 21 தொகுதிகள் சட்டமன்ற இடைத்தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் என எதிர்க்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் திமுகவிற்கு வெற்றி தேடிக்கொடுத்தார் மு.க. ஸ்டாலின்.
தமிழ்நாட்டு தேர்தல் வரலாற்றில் திமுக கூட்டணிக்கு அடுத்தடுத்த ஒவ்வொரு தேர்தலிலும் சுமார் 100 சதவீத வெற்றியை தேடித்தந்தவர் மு.க.ஸ்டாலின். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவால் உருவான அரசியல் வெற்றிடத்தை இவரால் நிரப்ப முடியுமா? என அரசியல் பண்டிதர்களும், விமர்சகர்களும் கேள்வி எழுப்பினர். ஆனால் தற்போது தமிழ்நாட்டின் நிகழ்காலமும், எதிர் காலமும் மு.க.ஸ்டாலினை வைத்து தமிழ்நாடு தன்னை நிரப்பிக்கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, சமூகநீதி, பொருளாதார வளர்ச்சியை கட்டிக்காப்பதற்கு நம்பத் தகுந்தவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே என்பதை தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் நிரூபித்துள்ளனர்.
கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்காதவர்கள் இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று நினைக்கும் அளவிற்கு சிறப்பான ஆட்சியை நடத்துவோம் என்று ஆட்சிப் பொறுப்பேற்ற போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்கத் தவறியவர்கள் அந்த ஏக்கத்தை தற்போது நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக திரண்டு வந்து வாக்களித்து தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முதல்முறையாக பிற தலைவர்களுடன் ஒப்பிட்டு பார்த்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக, தமிழ்நாட்டு மக்களின் ஒரே தேர்வாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவெடுத்துள்ளார். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது மாநில உரிமைகளை காப்பதற்காக ஆளுங்கட்சியான அதிமுக செய்யத் தவறியதையையும் சேர்த்து மு.க. ஸ்டாலின்தான் செய்ய வேண்டி இருந்தது. அதிமுக ஆட்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாவட்டம் மாவட்டமாக ஆய்வு சென்றபோது அதனை எதிர்த்து கறுப்புக்கொடி போராட்டம் நடத்தியது திமுக தான்.
ஆளுங்கட்சியாக திமுக மாறியபோது தமிழ்நாட்டின் பாதுகாவலராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக குரல் எழுப்பியதோடு, மாநில உரிமைகளை பாதுகாக்கும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக உள்கட்சி பிரச்னையில் முடங்கி கிடந்தபோது, எதிர்க்கட்சித் தலைவர் பேச வேண்டிய குரலையும் சேர்த்தே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிரொலித்தார்.
தமிழ்நாடு அரசியலில் இதற்கு முன்பு எந்த ஒரு முதலமைச்சரும் எதிர்க்கட்சியின் உறுதுணை இல்லாமல் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை போல் தன்னந்தனியாக போராட வேண்டிய சூழல் ஏற்பட்டதில்லை. அந்த உழைப்பையும், துணிச்சலையும் அங்கீகரிப்பதற்காகத்தான் தங்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக மு.க.ஸ்டாலினை மக்கள் பார்க்கிறார்கள்.
செலுத்தும் வரியில் ஒரு ரூபாய்க்கு 29 காசுகளையே பாஜக அரசு திருப்பித் தந்தது. தேசிய பேரிடர் காலங்களில் பேரிடர் நிவாரண நிதியை நிறுத்தி வைத்தது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி அமைப்புகளை பயன்படுத்தியது, தமிழ்நாட்டின் வளர்ச்சியை விரும்பாத ஆளுநரை நியமித்தது, மோடி, அமித்ஷா, அண்ணாமலை உள்ளிட்ட மேல்மட்ட பாஜக தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை தமிழ்நாட்டிற்கு எதிராக அவதூறு விஷம பிரசாரம் செய்தது போன்ற நெருக்கடிகளை பாஜக கொடுத்த போதும் மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம், காலைச் சிற்றுண்டி புதுமைப் பெண் என ஏராளமான திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார்.
திமுக ஆட்சிக்கு வந்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது, தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. சொல்லியதை மட்டுமல்ல சொல்லாததையும் திட்டங்களாக நிறைவேற்றி வருவதால்தான் திமுக தமிழ்நாட்டில் இத்தனை இடங்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
மத்திய பாஜக அரசு கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசுக்கு கொடுத்த நெருக்கடியிலும் இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்கும் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக நிறைவேற்றியதை ஒப்பிட்டு பார்த்த மக்கள், இவரைப்போன்ற ஒரு சிறந்த நிர்வாகியை தவறவிட்டுவிடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வோடு நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்துள்ளார்கள்.
நாட்டில் எதிர்க்கட்சிகளே இருக்கக்கூடாது என்கிற நிலையை ஏற்படுத்த கடந்த 10 ஆண்டுகளில் எவ்வளவோ அத்துமீறல்களை அரங்கேற்றினார் பிரதமர் மோடி. ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எதிர்க்கட்சிகளின் அரசியல் எதிர்காலத்தையும் சேர்த்து பாதுகாக்கத்தான் திமுக போராடி வருகிறது. எனினும் மக்கள் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் திமுக மீது குவித்துள்ளதால் திமுகவிற்கு எதிரிகளே இல்லை என்பதை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன.
அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து வந்தாலும் அதிமுக கூட்டணியில் இல்லாமல் தனி அணியாக வந்தாலும் பாஜகவை எந்த சூழலிலும் தமிழ்நாடு ஏற்காது என்பதற்கான தெளிவான அறிகுறிதான் இந்த தேர்தல் முடிவு. பாஜகவுக்கு எதிரான வாக்குகளை அறுவடை செய்வதற்காக அதிமுகவும் பாஜகவும் சேர்ந்து நாடகம் நடத்தின. தனித்து நிற்பதால் கூறிக்கொண்டாலும் பாஜகவை எதிர்த்து எடப்பாடியின் அதிமுக விமர்சிக்கவே இல்லை. பாஜக- அதிமுக நடத்திய போலியான கூட்டணி முறிவை தமிழ்நாட்டு வாக்காளர்கள் பார்த்து நகைத்தனர். அது தான் இந்த தேர்தல் முடிவில் எதிரொலித்திருக்கிறது.
அதிமுக, பாஜக, நாம் தமிழர் என தற்போதிருக்கும் கட்சிகளும், இனி உருவாகும் கட்சிகளும் கூட திமுகவுக்கு எதிர்நிலையில் இருந்தே அரசியல் களத்தை கட்டமைக்கின்றன. ஒரு பக்கம் திமுக என்றால் மறுபுறம் அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகள் நிற்பதற்கு காரணம் காட்டுக்கு ராஜா சிங்கம் போல தமிழ்நாட்டிற்கு ராஜாவாக விஸ்வரூபமெடுத்து நிற்பது திமுக மட்டும் தான்.
கடந்த 50 ஆண்டுகளாக எத்தனை கட்சிகள் உருவானாலும் திமுக உருகுலையாமல் களத்தில் கம்பீரத்தோடு நின்று கொள்கைத்தீரத்தோடு களமாடி வெற்றியை பெற்று வருகிறது.உலகில் உள்ள மாபெரும் புரட்சி இயக்கங்களில் ஒன்றான திமுகவை வழிநடத்தும் தலைவர் பொறுப்பை ஏற்றதில் இருந்து இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே தனதாக்கி வருகிறார் மு.க.ஸ்டாலின்.
அரசியல் களத்தில் மு.க.ஸ்டாலினுக்கு எதிரில் சில கட்சிகள் நின்றாலும் வெற்றிவாகையை அவருக்கு தொடர்ந்து சூட்டி அழகுபார்க்கவே தமிழ்நாட்டு மக்கள் விரும்புகிறார்கள்.
அடுத்து வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுகவே வென்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் தொடர்வார். 2026 மட்டுமல்ல அடுத்தடுத்து வரும் அனைத்து தேர்தல்களிலும் மு.க.ஸ்டாலினுக்கு வாக்களிக்கவே தமிழ்நாட்டு மக்கள் உறுதிபூண்டுள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாடு சமூகநீதி, சமத்துவம், ஜனநாயகம் ஆகியவற்றின் தொட்டிலாக திகழ்கிறது. அப்படிப்பட்ட இடத்தில் பாஜக செய்த மதவாத அரசியலை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்து விரோதி என திமுகவை பாஜக விமர்சித்ததை தமிழ்நாட்டு மக்கள் நிராகரித்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக INDIA கூட்டணியை உருவாக்க கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே விதை போட்டது திமுகதான். மதசார்ப்பற்ற சக்திகள் ஒன்றிணைந்தால் பாஜகவை எளிதில் வீழ்த்த முடியும் என்கிற நம்பிக்கையை கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே நாடெங்கிலும் உள்ள எதிர்க்கட்சிகளிடையே விதைத்தது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிதான்.
இந்தியா அரசியல் வரலாற்றில் ஒரு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக உருவாகி மறு நாடாளுமன்ற தேர்தலிலும் தொடர்வது திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிதான். அந்த விதைதான் INDIA கூட்டணி என்கிற விருட்சமாக 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உருவானது.
INDIA கூட்டணியில் யார் பிரதமர் என கேள்வி எழுப்பி பாஜக குழப்பம் விளைவிக்க நினைத்தபோது யார் பிரதமர் ஆகும் வேண்டும் என்பதைவிட யார் பிரதமர் ஆகக் கூடாது என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக 2024 நாடாளுமன்ற தேர்தல் இருக்க வேண்டும் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். இதனால் INDIA கூட்டணியின் ஒற்றுமை குலையாமல் இருந்தது.
வருமான வரித்துறை உள்ளிட்ட அரசு இயந்திரங்களை பயன்படுத்தி INDIA கூட்டணி கட்சிகளின் நிதியை முடக்கியது, தேர்தல் பத்திரங்கள் மூலம் பணத்தை சுருட்டி, அந்த பணத்தை வாக்குகள் பெற பாஜக வாரி இறைத்தது, தேர்தல் விதிகளை மீண்டும் மீண்டும் மீறி மத அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்தும் அகையில் பிரசாரம் செய்தது, எதிர்க்கட்சிகள் மீது உண்மைக்கு மாற தகவல்களுடன் அவதூறு பரப்புதல் என பல பழைய தந்திரத்தை பாஜக கையாண்ட போதிலும் அஞ்சாமல் INDIA கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் தேர்தல் களத்தில் நின்று பாஜகவின் முகத்திரையை கிழித்தன. அது பாஜகவுக்கு பெரும் பின்னடைவை தந்துள்ளது.” என திமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |