நாங்கள் தயார்... ஒரே நாளில் 600 தாலிபான்களை கொன்று தள்ளிய வடக்கு கூட்டணி பகிரங்க அறிவிப்பு
மத அறிஞர்களிடமிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, தாலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என வடக்கு கூட்டணி அறிவித்துள்ளது.
வடக்கு கூட்டணியின் தலைவர் அஹ்மத் மசூத் குறித்த தகவலை தமது சமூக ஊடக பக்கம் ஊடாக தெரிவித்துள்ளார். இதனால் தங்களுக்கும் தாலிபான்களுக்கும் இடையேயான போர் முடிவுக்கு வருவதில் தங்களுக்கு எதிர்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சுற்றியுள்ள மாவட்டங்களை கைப்பற்றிய பிறகு, மாகாண தலைநகரான பன்ஜ்ஷீருக்குள் நுழைந்ததாக தாலிபான் படைகள் கூறினர். ஆனால், சனிக்கிழமை இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலில் கிட்டதட்ட 600 தாலிபான்கள் கொல்லப்பட்டதாக வடக்கு கூட்டணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கூட்டணியின் செய்தித்தொர்பாளர் Fahim Dashti ட்விட்டரில் பதிவிட்டதாவது, சனிக்கிழமை காலை முதல் பன்ஜ்ஷீரின் பல்வேறு மாவட்டங்களில் கிட்டதட்ட 600 தாலிபான்கள் கொல்லப்பட்டனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாலிபான் போராளிகள் பிடிபட்டனர் அல்லது தானாக சரணடைந்தனர். மட்டுமின்றி, ஆப்கானிஸ்தான் பிற மாகாணங்களில் இருந்து பொருட்களை பெறுவதில் பன்ஜ்ஷீரில் உள்ள தாலிபான்களுக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் வடக்கு கூட்டணி படையினரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையிலேயே, மத அறிஞர்களிடமிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று பேச்சுவார்த்தைக்கு தாங்கள் தயாரென வடக்கு கூட்டணியின் தற்போதைய தலைவர் அஹ்மத் மசூத் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய பிரச்சினைகளை தீர்க்கவும், சண்டையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரவும் மற்றும் பேச்சுவார்த்தைகளை தொடரவும் ஒப்புக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.