சொந்த ஊரில் பஹல்காம் சுற்றுலாப்பயணிகளின் உடல்கள் - கதறி அழும் குடும்பத்தினர்
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதல்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சுற்றுலாப்பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர்.
இதில் உயிரிழந்தவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதால், இந்த சம்பவம் நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களில், நேபாள நாட்டை சேர்ந்தவரும் அடங்குவர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் முதலில் சவப்பெட்டிகளில் ஸ்ரீநகருக்குக் கொண்டு வரப்பட்டன. அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர், ஸ்ரீநகரிலிருந்து 50க்கும் மேற்பட்ட விமானம் மூலம், சுற்றுலாப் பயணிகளும், உயிரிழந்தவர்களின் உடல்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இறுதிச்சடங்கு
கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் உடல் புதன்கிழமை பிற்பகல் காஷ்மீரில் இருந்து டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஹரியானாவின் கர்னாலில் உள்ள அவரது சொந்த ஊரான கர்னாலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
#WATCH | Haryana | Last rites of Indian Navy Lieutenant Vinay Narwal, who was killed in the Pahalgam terror attack, being performed at his native place in Karnal. pic.twitter.com/mRxMmPkXgn
— ANI (@ANI) April 23, 2025
முழு இராணுவ மரியாதையுடன் நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கில், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
26 வயதான வினய் நர்வாலிற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. தேனிலவிற்கு சென்ற போது, பயங்கரவாதிகள் அவரது மனைவி ஹிமான்ஷியின் கண் முன்னே அவரைச் சுட்டுக்கொன்றுள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய விமானப்படை கார்போரல் டேஜ் ஹைல்யாங்கின் உடல் குவஹாத்தி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அசாம் அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா மற்றும் குவஹாத்தி நகர காவல் ஆணையர் பார்த்தா சாரதி மஹந்தா ஆகியோர் அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
துபாயில் பட்டயக் கணக்காளராகப் பணிபுரிந்த நீரஜ் உத்வானியின் உடல், அவரது சொந்த ஊரான ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்குக் கொண்டுவரப்பட்டது. திருமண விழாவிற்காக அவர் தனது மனைவி ஆயுஷியுடன் பஹல்காம் சென்றிருந்தார்.
புனேவைச் சேர்ந்த சந்தோஷ் ஜக்டேல் மற்றும் கவுஸ்துப் கண்போட் ஆகியோரின் உடல்கள் இன்று அதிகாலை 5.30 மணியளவில் புனே சர்வதேச விமான நிலையத்தை அடைந்தன. அங்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மொஹோல் அந்த உடல்களை பெற்றுக்கொண்டார்.
கன்போட், அவரது மனைவி, சங்கீதா மற்றும் ஜக்டேல், அவரது மனைவி பிரகதி மற்றும் அவர்களது மகள் அசவாரி ஆகியோர் விடுமுறைக்காக காஷ்மீர் சென்றிருந்தனர்.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த எல்ஐசி மேலாளரான சுஷில் நதானியேலின் உடல் புதன்கிழமை இரவு காஷ்மீரில் இருந்து இந்தூருக்கு கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
#WATCH | Indore | Madhya Pradesh CM Mohan Yadav pays last respects to Sushil Nathaniel, who was killed in the #PahalgamTerroristAttack yesterday. pic.twitter.com/FgkrqqMp51
— ANI (@ANI) April 23, 2025
கிறிஸ்தவரான நதானியேலை, முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கைகளை உருவாக்கும் 'கல்மா'வை பயங்கரவாதிகள் ஓதச் சொன்னதாக, அவரது மனைவி தன்னிடம் கூறியதாக, மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் தானேயில் உள்ள டோம்பிவ்லியில் புதன்கிழமை மாலையில் நடந்த மூன்று உறவினர்களான சஞ்சய் லெலே (50), ஹேமந்த் ஜோஷி (45) மற்றும் அதுல் மோனே (43) ஆகியோரின் இறுதிச் சடங்கில் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
With a very heavy heart, took Antim Darshan and met the grieving families.
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) April 23, 2025
Heart wrenching moments.
ॐ शांति 🙏#PahalgamTerrorAttack #Maharashtra https://t.co/0Uw7evz5VN pic.twitter.com/BUMgJmjlJY
அவர்களின் மரணத்தால் ஏற்பட்ட வலியையும் வேதனையையும் விவரிக்க வார்த்தைகளால் திணறி வருவதாக, அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் தெரிவித்தனர்.
ஆந்திராவின் நெல்லூரை சேர்ந்த சேர்ந்த ஐடி ஊழியரான மதுசூதனின் உடல், வியாழக்கிழமை அதிகாலையில் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
தமிழக பாஜக மற்றும் காங்கிரஸ் பிரிவுகளின் தலைவர்கள் முறையே நயினார் நாகேந்திரன் மற்றும் கே. செல்வப்பெருந்தகை, அதிமுகவின் கே.பி. கந்தன் ஆகியோர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் ஆந்திராவின் நெல்லூருக்கு கொண்டு செல்லப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |