பாகிஸ்தான் எடுத்த முடிவு... அதிக செலவுகளைச் சந்திக்கும் இந்திய விமான நிறுவனங்கள்
பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியதைத் தொடர்ந்து, சர்வதேச விமானங்களை மாற்றுப்பாதையில் இயக்குவதால், இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்கள் அதிக எரிபொருள் செலவுகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
பதிலுக்கு பாகிஸ்தான்
காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட கொடிய தீவிரவாத தாக்குதல் சம்பவத்தால் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் புதிய நெருக்கடி உருவாகியுள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் துப்பாக்கிதாரிகள் 26 பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஆனால் அந்த குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
இந்த நிலையில் இந்தியா மிக முக்கியமான நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. பதிலுக்கு பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடி இந்திய விமான நிறுவனங்களுக்கு அனுமதி மறுத்துள்ளது.
இதனையடுத்து ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்கள் நியூயார்க், அஜர்பைஜான் மற்றும் துபாய்க்கான விமானங்களை மாற்றுப்பாதையில் இயக்கத் தொடங்கியதால், வியாழக்கிழமை இரவு முதல் வான்வெளி மூடப்பட்டதன் தாக்கம் தெளிவாகத் தெரியத்தொடங்கியது.
உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான டெல்லி விமான நிலையமே மிக மோசமாகப் பாதிக்கப்படும், அங்கிருந்துதான் மேற்கு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைக் கடந்து செல்கின்றன.
வெளியான தரவுகளின் அடிப்படையில், இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் அதன் பட்ஜெட் பிரிவான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை ஏப்ரல் மாதத்தில் டெல்லியிலிருந்து ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்காவிற்கு திட்டமிடப்பட்ட சுமார் 1,200 விமானங்களைக் கொண்டுள்ளன.
மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது
டெல்லியில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் ஏர் இந்தியாவின் விமானங்கள் தற்போது சுமார் ஒரு மணி நேரம் கூடுதலாகப் பறக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன, அதாவது அதிக எரிபொருள் செலவுகள் மற்றும் கூடுதல் எரிபொருளை ஏற்றிச் செல்ல வேண்டியிருப்பதால் சரக்குகளை குறைக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
இண்டிகோ நிறுவனம் தங்களது சில விமானங்கள் இந்த விவகாரங்களால் பாதிக்கப்படும் என்று வெள்ளிக்கிழமை கூறியது, அதே நேரத்தில் ஏர் இந்தியா தங்கள் எக்ஸ் தளத்தில், வட அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் சில விமானங்கள் நீட்டிக்கப்பட்ட மாற்று பாதையில் செல்லும் என்று பதிவிட்டுள்ளது.
டெல்லிக்கு வெளியே மிகப்பெரிய நீண்ட மற்றும் மிக நீண்ட தூர விமான சேவை அமைப்பைக் கொண்ட ஏர் இந்தியா நிறுவனம் தற்போது பாகிஸ்தானின் முடிவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. விமான எரிபொருள் மற்றும் எண்ணெய் செலவுகள் பொதுவாக ஒரு விமான நிறுவனத்தின் இயக்கச் செலவுகளில் சுமார் 30 சதவீதத்தை ஈடுசெய்கின்றன.
டெல்லி முதல் பாகு வரையான விமானப் பயணம் பொதுவாக 5 மணி 5 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும் நிலையில் தற்போது 5.43 மணிநேரம் எடுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது.
இதனிடையே தடை என்பது மே 23ம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என்றே பாகிஸ்தான் அறிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில், அண்டை நாடுகளுக்கு இடையேயான பதற்றங்களின் போது சுமார் ஐந்து மாதங்களுக்கு பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டதால் ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் பிற விமான நிறுவனங்களுக்கு குறைந்தது 64 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டதாக இந்திய அரசாங்கம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |