புல்வாமாவின்போது நான் கணித்ததுபோல் பஹல்காமிற்கு பிறகும்: இம்ரான்கான் கண்டனம்
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி இம்ரான் கான் பஹல்காம் தாக்குதல் குறித்து மோடி அரசை விமர்சித்துள்ளார்.
இம்ரான் கான் கண்டனம்
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான இம்ரான் கான் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்.
இந்த நிலையில் இம்ரான் கான் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் இதுகுறித்து தனது எக்ஸ்தள பதிவில் கூறுகையில், "பஹல்காம் சம்பவத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகவும் கவலையளிக்கிறது. புல்வாமா சம்பவம் நடந்தபோது, நாங்கள் இந்தியாவிற்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்கினோம்.
ஆனால் இந்தியா எந்த உறுதியான ஆதாரத்தையும் வழங்க தவறிவிட்டது. 2019யில் நான் கணித்தது போல, பஹல்காம் சம்பவத்திற்குப் பிறகும் அதேதான் நடக்கிறது.
சுயபரிசோதனை மற்றும் விசாரணைக்கு பதிலாக, மோடி அரசாங்கம் மீண்டும் பாகிஸ்தானைக் குறை கூறுகிறது. நவாஸ் ஷெரீப் மற்றும் ஆசிப் சர்தாரி போன்ற சுயநலவாதிகளிடம் இருந்து எந்தவிதமான கடுமையான நிலைப்பாட்டையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.
அவர்களின் சட்டவிரோத சொத்து மற்றும் வணிக நலங்கள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்கள் ஒருபோதும் இந்தியாவிற்கு எதிராக பேச மாட்டார்கள்.
ஒன்றரை பில்லியன் மக்கள் வசிக்கும் நாடாக இந்தியா இருப்பதால், குழப்பமடைவதற்குப் பதிலாக பொறுப்புடன் செயல்பட வேண்டும். அமைதியே எங்கள் முன்னுரிமை, ஆனால் அதை கோழைத்தனம் என்று தவறாகக் கருதக்கூடாது" என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் வன்மையாக கண்டிக்கிறது
மேலும் அவர், "2019ஆம் ஆண்டில் முழு நாட்டின் ஆதரவுடன் எனது அரசாங்கம் செய்தது போல், எந்தவொரு இந்திய ஆக்கிரமிப்புக்கும் தகுந்த பதிலடி கொடுக்கும் முழு திறனையும் பாகிஸ்தான் கொண்டுள்ளது.
ஐ.நா தீர்மானங்களால் உத்தரவாதம் அளிக்கப்பட்டபடி, காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமையின் முக்கியத்துவத்தை நான் எப்போதும் வலியுறுத்தி வருகிறேன்.
மோடியின் போர் வெறியையும், பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அவரது ஆபத்தான லட்சியங்களையும் பாகிஸ்தான் ஒரு நாடாக வன்மையாக கண்டிக்கிறது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |