துப்பாக்கிச் சூடு எதிரொலி... எல்லைகளை மொத்தமாக மூடிய பாகிஸ்தான்
இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுடனான எல்லைக் கடவைகளை மூடியது.
தக்க பதிலடி
குறித்த தகவலை பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை இரவு பாகிஸ்தான் எல்லைச் சாவடிகள் மீது ஆப்கானிஸ்தான் துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த வார தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் முன்னெடுத்த வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக துப்பாக்கிச் சூடு நடந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனால் ஆப்கானிஸ்தானிற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளதாகவும், பதிலடி தாக்குதல்களில் பல ஆப்கானிஸ்தான் எல்லைச் சாவடிகள் அழிக்கப்பட்டன என்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை காலை துப்பாக்கிச் சண்டை பெரும்பாலும் முடிவடைந்ததாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பாகிஸ்தானின் குர்ரம் பகுதியில், இடைவிடாது துப்பாக்கிச் சூடு தொடர்ந்ததாக உள்ளூர் அதிகாரிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுடனான பாகிஸ்தானின் இரண்டு முக்கிய எல்லைக் கடவைகளான டோர்காம் மற்றும் சாமன் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாய்ப்பில்லை
மட்டுமின்றி, கார்லாச்சி, அங்கூர் அட்டா மற்றும் குலாம் கான் ஆகிய இடங்களில் குறைந்தது மூன்று சிறிய கடவைகளும் மூடப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் ஆப்கானிஸ்தான் தரப்பில் இருந்து இதுவரை இந்த விவகாரம் தொடர்பில் கருத்தேதும் தெரிவிக்கப்படவில்லை. ஆப்கானிஸ்தானின் எந்தப் பகுதியிலும் எந்தவிதமான அச்சுறுத்தலுக்கும் வாய்ப்பில்லை என்று தாலிபான் நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுடன் 1600 மைல் நீளம் கொண்ட எல்லையை ஆப்கானிஸ்தான் பகிர்ந்துகொண்டுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானைத் தாக்கும் போராளிகளுக்கு தாலிபான் நிர்வாகம் புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. ஆனால் ஆப்கானிஸ்தான் நிர்வாகம் அதை மறுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |