இம்ரான் கான் கைது சட்டவிரோதமானது: உடனடியாக விடுதலை செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை சட்டவிரோதம் என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை ஊழல் தடுப்பு ஏஜென்சி கைது செய்தது சட்டவிரோதமானது என்று கூறிய பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், இன்று அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது.
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் "இம்ரான் கானுக்கு நடந்தது நீதி அல்ல" என்று குறிப்பிட்டுள்ளது.
Reuters
இம்ரான் கான் கைது
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியின் தலைவர் இம்ரான் கான், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே பாகிஸ்தான் ரேஞ்சர்கள் என அழைக்கப்படும் துணை ராணுவ படையினரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
அல்-காதர் அறக்கட்டளை வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக ராவல்பிண்டியில் உள்ள தேசிய பொறுப்புடைமை பணியகம் (National Accountability Bureau ) மே 1-ம் திகதி கைது வாரண்ட் பிறப்பித்தது.
Source: Twitter/ @PTIofficial
பாகிஸ்தானில் வெடித்தது வன்முறை
அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் பல நகரங்களில் வன்முறை வெடித்தது. இம்ரான் கானின் ஆதரவாளர்கள் ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தையும், லாகூரில் உள்ள கார்ப்ஸ் கமாண்டர் இல்லத்தையும் தாக்கினர்.
பாகிஸ்தானில் வெடித்த வன்முறையில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Getty Images
தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு
இதற்கிடையில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி, இம்ரான் கான் கைதுக்கு ஆதரவான இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்தது.
அதனைத் தொடர்ந்து, இன்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் மூன்று உறுப்பினர் பெஞ்ச், பாகிஸ்தான் தலைமை நீதிபதி உமர் அதா பண்டியல், நீதிபதிகள் முகமது அலி மசார் மற்றும் நீதிபதி அதர் மினல்லா ஆகியோர், ஊழல் வழக்கில் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டதற்கு எதிராக முன்னாள் பிரதமரின் மனுவை விசாரித்தபோது அவரை அழைத்து வர அந்நாட்டின் ஊழல் தடுப்பு கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டனர்.
Getty Images
உடனடியாக விடுதலை செய்ய உத்தரவு
இதையடுத்து, இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம் என பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது. மேலும் நீதிமன்ற வளாகத்திலிருந்து யாரையும் கைது செய்ய முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இந்நிலையில், இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
AP Photo