இந்தியாவுடன் நடந்த மோதல்... இழப்புகளை இறுதியில் ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்
கடந்த வாரம் இந்தியாவுடன் ஏற்பட்ட இராணுவ மோதல்களில் 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவம்
குறித்த மோதலானது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது. மட்டுமின்றி, எல்லையில் அமைதி திரும்ப நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகிறது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்கியதாக கூறியதை அடுத்து, பரம எதிரிகள் இருவரும் ஒருவருக்கொருவர் இராணுவ தளங்களை குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவினர்.
காஷ்மீரில் சுற்றுலாப்பயணிகள் மீதான தாக்குதலை அடுத்தே இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் என இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தது. இந்த நிலையில், தாக்குதல் நடத்தப்பட்ட இலக்குகள் அனைத்தும் பொதுமக்கள் வசிக்கும் பகுதி என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களில் பொதுமக்களில் 40 பேர்களும் ஆயுதப் படையினர் 11 பேர்களும் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியா தரப்பில் குறைந்தது 5 ராணுவத்தினரும் 16 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் ராஜதந்திரம் மற்றும் அழுத்தத்தைத் தொடர்ந்து, இருவரும் சனிக்கிழமை போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர். சிறிய சேதங்கள் இருந்தபோதிலும், இந்திய இராணுவம் தங்களது தளங்கள் செயல்பாட்டில் இருப்பதாகக் கூறியுள்ளது.
மீண்டும் குறிவைக்கும்
இதனிடையே, ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்றிருந்த பிரதமர் மோடி, துணிச்சல், உறுதிப்பாடு மற்றும் அச்சமின்மை ஆகியவற்றின் உருவகமாக இருப்பவர்களுடன் இருப்பது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது என்றார்.
மேலும், இந்தியா மீது புதிய தாக்குதல்கள் நடந்தால், எல்லையைத் தாண்டி பயங்கரவாதிகளின் மறைவிடங்களை இந்தியா மீண்டும் குறிவைக்கும் என்றும், பாகிஸ்தானின் அணுசக்தி அச்சுறுத்தலால் இந்தியா பின்வாங்காது என்றும் திங்களன்று மோடி பாகிஸ்தானை எச்சரித்தார்.
ஏப்ரல் 22ம் திகதி காஷ்மீரில் இந்திய சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர்கள் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்டும் நிலையில், அந்த நாடு குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |