ஈரான் போரில் மத்தியஸ்தம் - அமெரிக்காவிடம் 10 பில்லியன் டொலர் கேட்கும் பாகிஸ்தான்
ஈரான் போரில் மத்தியஸ்தம் செய்ததையடுத்து, பாகிஸ்தான் அமெரிக்காவிடம் 10 பில்லியன் டொலர் நிதியுதவி கோரியுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான்
பாகிஸ்தான் நீண்ட காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 7 பில்லியன் டொலர் நிபந்தனை கடன் பெற்றுள்ளதால், அதனை சமாளிக்க வரி உயர்வுகள், செலவினக் கட்டுப்பாடு மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே கையிருப்பில் இருந்ததில், 3.5 பில்லியன் டொலரை ஐக்கிய அரபு அமீரகத்திடம் வாங்கிய கடனிற்கு திருப்பிச் செலுத்தியது.
அதனைத் தொடர்ந்து சவூதி அரேபியாவிடம் 3 பில்லியன் டொலர் கடன் பெற்றது.
அமெரிக்காவிடம் 10 பில்லியன் டொலர் கோரிக்கை
சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்பட்டு தனது ராஜதந்திர செல்வாக்கை உயர்த்தியது.
இதனைத்தொடர்ந்து, தனது பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அமெரிக்காவிடம் 10 பில்லியன் டொலர் நிதி உதவி கோரியுள்ளது.
இதன் மூலம், தனது அந்நியச் செலாவணிக் கையிருப்பை வலுப்படுத்தவும், பிற நாடுகளிடமிருந்து நிதியுதவி பெறுவதை சேர்ந்திருப்பதை குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.

இதற்காக பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது அவுரங்கசீப், அமெரிக்காவில் அமெரிக்க நிதித்துறை அமைச்சர் பெசென்ட்டைச் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த 10 பில்லியன் டாலர் மதிப்பிலான இருதரப்புப் பரிவர்த்தனை நிலைப்படுத்தல் ஆதரவு வசதி, 5 ஆண்டுகள் வரையிலான முதிர்வுக் காலத்தைக் கொண்டிருக்கலாம்.
பரிவர்த்தனை நிலைப்படுத்தல் வசதிகள் என்பது அந்நியச் செலாவணிக் கையிருப்பு மற்றும் நாணயங்களுக்கு ஆதரவளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட, அமெரிக்க கருவூலத்தால் ஆதரிக்கப்படும் அரிதான வழிமுறை ஆகும்.
இது அமெரிக்க மத்திய வங்கியின் நிரந்தர டொலர் மாற்று வழித்தடங்களிலிருந்து வேறுபட்டு, அமெரிக்க கருவூலத்தின் பரிவர்த்தனை நிலைப்படுத்தல் நிதியம் வழியாகச் செயல்படுத்தப்படுகிறது.
2002 ஆம் ஆண்டில் உருகுவேவும், 2025 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவும் இந்த நிதி உதவித் தொகுப்பை பெற்றுள்ளது.
டிரம்ப் நிர்வாகத்துடன் நெருக்கம்
இந்த நிதியுதவியை பெறுவதற்கு டிரம்ப் நிர்வாகத்துடனான வர்த்தக உறவுகளை பாகிஸ்தான் வேகப்படுத்தி வருகிறது.
டிரம்ப் குடும்பத்துடன் தொடர்புடைய கிரிப்டோ வணிக நிறுவனமான வேர்ல்ட் லிபர்ட்டி ஃபைனான்சியலின் துணை நிறுவனத்துடன், எல்லை தாண்டிய பணப்பரிவர்த்தனைக்கான ஸ்டேபிள்காயின் ஒப்பந்தத்தில் அது கையெழுத்திட்டுள்ளது.
நியூயார்க்கில் உள்ள பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்துக்கு சொந்தமான ரூஸ்வெல்ட் ஹொட்டலை மறுசீரமைக்க அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பாகிஸ்தானின் ரெகோ டிக் சுரங்கத் திட்டத்தில் 1.25 பில்லியன் டொலர் முதலீடு செய்வதாக அமெரிக்க ஏற்றுமதி-இறக்குமதி வங்கி அறிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |