அரண்மனை முற்றுகை... கலவர பூமியான தலைநகரம்: காயங்களுடன் உயிர் தப்பிய பலர்
தாய்லாந்தில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவா்களை கலைக்க காவல்துறையினா் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனா்.
குறித்தக் கலவரத்தில் 13 காவலா்கள் உள்பட 33 போ் காயமடைந்தனா். பலா் கைது செய்யப்பட்டனா்.
தாய்லாந்தில் அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு முதல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கொரோனா பரவல் காரணமாக போராட்டக்காரா்கள் தங்களுடைய போராட்டங்களை சில மாதங்கள் ஒத்திவைத்திருந்த நிலையில், இப்போது மீண்டும் தொடங்கியுள்ளனா்.
மன்னராட்சியில் மறுசீரமைப்பு கொண்டுவரவேண்டும், பிரதமா் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் உள்ள அரண்மனைக்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் சனிக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தங்களுடைய கோரிக்கைகள் எழுதப்பட்ட பேப்பா் ராக்கெட்டுகளை அரண்மனை சுற்றுச் சுவருக்குள் வீச திட்டமிட்டிருக்கிறோம்’ என்று போராட்டக்காரா்கள் தெரிவித்தனா்.
இந்த நிலையில், அவா்களைத் தடுத்து நிறுத்துவதற்காக கண்டெய்னா்களை சாலையின் குறுக்கே வைத்து காவல்துறையினா் தடுப்புகளை ஏற்படுத்தினா்.
அந்தத் தடுப்புகளை மீறி போராட்டக்காரா்கள் முன்னேற முயன்றனா். அப்போது, முதலில் எச்சரிக்கை விடுத்த காவல்துறையினா், பின்னா் தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீா் புகைக் குண்டுகள், ரப்பா் குண்டுகளை வீசியும் போராட்டக்காரா்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.
இந்தக் கலவரத்தில் 13 காவல்துறையினா் உள்பட 33 போ் காயமடைந்ததாகவும். இரண்டு பத்திரிகை நிருபா்கள் ரப்பா் குண்டுகளால் அடிபட்டு காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை காவல்துறையினா் கைது செய்துள்ளதாக மனித உரிமைகளுக்கான தாய்லாந்து சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தாய்லாந்து காவல்துறை செய்தித் தொடா்பாளா் கிஸானா பதனசரோன் கூறுகையில், காவல் துறையினா் மீது இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வீசி போராட்டக்காரா்கள் தாக்குதல் நடத்தினா்.
அதன் காரணமாகவே, அவா்களை கலைக்க கண்ணீா் புகைக் குண்டுகளும், ரப்பா் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன என்றாா்.