பணயக்கைதிகள் தொடர்பில் இஸ்ரேல் பிரதமருக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பாலஸ்தீன குழு
பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத்தின் ஆயுதப் பிரிவு, காஸாவில் எஞ்சியுள்ள பணயக்கைதிகள் தொடர்பில் ஒரு பயங்கரமான அச்சுறுத்தலை விடுத்துள்ளது.
பணயக்கைதிகளின் எதிர்காலம்
ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்துவிடக் கூடும் என்ற நிலையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அந்த ஆயுதப் பிரிவு கடும் எச்சரிக்கை விடுத்தது.
நெதன்யாகுவின் நடவடிக்கைகளை பொறுத்தே, பணயக்கைதிகளின் எதிர்காலம் என்றும் எச்சரித்துள்ளனர். சனிக்கிழமைக்குள் இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கத் தவறினால், மீண்டும் காஸாவில் சண்டையைத் தொடங்குவதாக நெதன்யாகு அச்சுறுத்தியதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை ஆறாவது பணயக்கைதிகள் மற்றும் கைதிகள் பரிமாற்றம் திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் இந்த வார தொடக்கத்தில் ஹமாஸ் படைகள் முடிவு செய்யப்பட்ட விடுதலையை ஒத்திவைப்பதாக அறிவித்திருந்தது.
மேலும், முக்கிய மனிதாபிமான உதவிகளை காஸாவிற்குள் நுழைய இஸ்ரேல் அனுமதிக்கத் தவறியதைக் காரணம் காட்டியது. ஆனால், பணயக்கைதிகள் தொடர்பில் நெதன்யாகு விடுத்துள்ள மிரட்டலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பும் உறுதி செய்துள்ளார்.
இறுதி எச்சரிக்கை
எஞ்சிய 76 பணயக்கைதிகளும் சனிக்கிழமை விடுவிக்கப்படாவிட்டால், அது அழிவுப்பாதைக்கான முடிவு என்றும் ஹமாஸ் படைகளை அவர் எச்சரித்தார். இதனிடையே, சர்ச்சையைத் தீர்க்க இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய இரு தரப்பினருடனும் மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
இன்று கெய்ரோவில் ஹமாஸ் தூதுக்குழு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட நிலையில், பயங்கரவாதக் குழுவிற்கு இறுதி எச்சரிக்கை விடுத்த பின்னர், இஸ்ரேல் காஸாவில் போரை மீண்டும் தொடங்குவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை 21 பணயக்கைதிகளுக்கு பதிலாக 730 பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |