மாணவரின் மரணம்... ஆபத்தான நொறுக்குத்தீனியை மொத்தமாக திரும்பப்பெற்ற நிறுவனம்
அமெரிக்காவில் சமூக ஊடக சவாலை எதிர்கொண்டு உலகின் மிகவும் காரமான சிப்ஸ் சாப்பிட்ட பாடசாலை மாணவன் ஒருவன் பரிதாபமாக இறந்த நிலையில், அந்த நிறுவனம் தங்கள் தயாரிப்பை திரும்பப்பெற முடிவு செய்துள்ளது.
மொத்தமாக திரும்பப்பெற முடிவு
அமெரிக்காவில் இளையோர்களிடையே பரவலாக கவனத்தை ஈர்த்த One Chip Challenge என்ற சமூக ஊடக சவாலானது விபரீதத்தில் முடிந்துள்ளது. மிச்சிகன் பகுதியை சேர்ந்த 14 வயது பாடசாலை மாணவன் ஹாரிஸ் வோலோபா குறித்த நொறுக்குத்தீனியை சாப்பிட்டு சில மணிநேரம் கழித்து மரணமடைந்துள்ளான்.
@gofundme
இதனையடுத்து தற்போது Paqui நிறுவனம் தங்கள் தயாரிப்பை மொத்தமாக திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நிறுவனம் முன்வைத்த சவாலானது உண்மையில் வயது வந்தவர்களுக்கு மட்டுமே என கூறப்படுகிறது.
மேலும், ஆபத்தான அந்த நொறுக்குத்தீனியானது சிறார்கள் மற்றும் காரமான உணவு வகைகளை உட்கொள்ளாதவர்களுக்கும் ஏற்றதல்ல என குறிப்பிட்டுள்ளனர். மட்டுமின்றி, தங்கள் தயாரிப்பை திரும்பப்பெற முடிவு செய்துள்ள நிலையில், ஏற்கனவே அந்த தயாரிப்பை வாங்கியவர்களுக்கு கட்டணத்தை திருப்பியளிக்கவும் தயாராக இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Paqui நிறுவனத்தின் அந்த காரமான நொறுக்குத்தீனியை கடைகளில் இருந்தும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். One Chip Challenge என்ற சமூக ஊடக சவாலில் கலந்துகொண்ட அன்றே ஹாரிஸ் வோலோபா மரணமடைந்துள்ளார்.
மிகவும் காரமான மிளகாய்
பாடசாலையில் வைத்து அந்த நொறுக்குத்தீனியை உட்கொண்டு, வயிற்று வலி இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், வீட்டுக்கு திரும்பியதை அடுத்து சுருண்டு விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
@paqui
Paqui நிறுவனத்தின் அந்த காரமான டார்ட்டில்லா நொறுக்குத்தீனியானது உலகில் உள்ள இரண்டு மிகவும் காரமான மிளகாய்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த நொறுக்குத்தீனியானது மிகவும் தீவிரமான மற்றும் ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றே மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
2022ல் லூசியானா மாகாணத்தில், இந்த காரமான நொறுக்குத்தீனி காரணமாக பல மாணவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டதை அடுத்து, அனைத்து வளாகங்களிலிருந்தும் தடை செய்யப்பட்டது.
2016ல் இருந்தே Paqui நிறுவனத்தின் காரமான டார்ட்டில்லா நொறுக்குத்தீனி பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |