திருநங்கையாக மாறிய மகன்! ஊரை கூட்டி மஞ்சள் நீராட்டு விழா நடத்திய பெற்றோர்... நெகிழ்ச்சி சம்பவம்
தமிழகத்தில் திருநங்கையாக மாறிய மகனுக்கு அனைவர் முன்னிலையிலும் மஞ்சள் நீராட்டு விழாவை பெற்றோர் நடத்தியுள்ளனர். இதன்மூலம் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருவரும் மாறியுள்ளனர்.
விருதாச்சலத்தைச் சேர்ந்த திருநங்கை நிஷா 3 வருடங்களுக்கு முன்னர் தனது வீட்டை விட்டு வெளியேறும்போது, மீண்டும் இந்த வீட்டுக்கு வருவோம் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார். ஆனால், தனது மகன் வீட்டுக்கு வந்தால் போதும் என்று மட்டும் நினைக்காமல், தங்களது மகன், மகளாக.. திருநங்கையாக மாறியதை, கொண்டாடுவது போல, உற்றார், உறவினர்களை அழைத்து வெகு விமரிசையாக மஞ்சள் நீராட்டு விழாவையும் நடத்தி முடித்துள்ளனர்.
வழக்கமாக நடைபெறும் மஞ்சள் நீராட்டு விழா சடங்குகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டது. நிஷாவுடன் படித்த பெண்களும் இந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். விருதாச்சலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான கொலஞ்சி - அமுதா தம்பதிக்கு பிறந்தவர் நிஷா. விருதாச்சலத்தில் துவக்கப் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, திருச்சியில் உயர்நிலைப் பள்ளிப் படிப்புக்கு சென்றார்.
இது குறித்து நிஷா கூறுகையில், பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு வீட்டில்தான் இருந்தேன். வீட்டு வேலைகளை செய்வேன். பெண் பிள்ளைகளுடன்தான் விளையாடுவேன். எப்போதும் என்னை ஒரு பெண்ணாகவே உணர்ந்தேன்.
இதனால் கோபத்தில் என் பெற்றோர் என்னை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறிவிட்டார்கள். திருச்சி சென்று அங்கு மூன்றாம் பாலினத்தவர்களோடு தங்கி, அறுவை சிகிச்சையும் செய்து கொண்டேன். பல ஆண்டுகள் அவர்களுடனே தங்கிவிட்டேன்.
சில மாதங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்தேன். என் பெற்றோரிடம் என் சூழ்நிலையை விளக்கினேன் என கூறியுள்ளார்.