மகனை கருணை கொலை செய்யக் கோரி பெற்றோர் மனு.., உச்சநீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு
மகனை கருணை கொலை செய்யக் கோரிய பெற்றோரின் மனுவுக்கு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தனது கடைசி பணி நாளில் தீர்ப்பு வழங்கினார்.
உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 9-ம் திகதி பதவியேற்ற சந்திரசூட், பல்வேறு முக்கியமான தீர்ப்புகளை வழங்கியுள்ளார். இவர், கடந்த 10 -ம் திகதி ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், தனது கடைசி பணி நாளில் முக்கியமான தீர்ப்பை வழங்கி பாராட்டை பெற்றுள்ளார்.
கருணை கொலை செய்ய மனு
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், காஜியாபாத்தை சேர்ந்த தம்பதியினர் அசோக் ராணா (60) மற்றும் நிர்மலா தேவி (55). இவருக்கு 30 வயதில் ஹரிஷ் என்ற மகன் உள்ளார்.
இவரது மகன் ஹரிஷ், கடந்த 2013 -ம் ஆண்டில் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் கட்டுமான பொறியியல் பாடப்பிரிவில் படித்து கொண்டிருந்தார். அப்போது பல்கலைக்கழக விடுதியில் தங்கி வந்தார்.
கடந்த 2013 ஆகஸ்ட் 5-ம் திகதி அன்று விடுதியின் 4-வது மாடி பால்கனியில் இருந்து ஹரிஷ் தவறி கீழே விழுந்தார்.
உடனே, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது கோமா நிலைக்கு சென்று விட்டார் என்று கூறினர். பின்பு, மேல்சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து, கடந்த 11 ஆண்டுகளாக அவரை பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்பட்டும் கோமாவில் இருந்து மீளவில்லை. இவருக்கு தற்போது வரை குழாய் மூலமாக மட்டுமே உணவு வழங்கப்பட்டு வருகிறது.
ஹரிஷின் தந்தை ஓட்டலில் பணியாற்றிய போது மாதம் ரூ.28,000 ஊதியம் கிடைத்தது. இதில் ரூ.27,000-ஐ தனது மகனின் சிகிச்சைக்காக செலவு செய்து வருகிறார். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் குடும்பத்தை கவனித்து வருகிறார்.
தற்போது, அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்று தின்பண்டங்கள் தயாரிக்கும் பணியை செய்து வருகிறார். இதனால், மகனின் மருத்துவ செலவை அவர்களால் பார்த்துக் கொள்ள முடியவில்லை.
இதையடுத்து, மகனை கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தீர்ப்பு
பின்பு, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்தது. இதில், நீதிபதி தான் ஓய்வு பெறுவதற்கு முன்பு தீர்ப்பை வழங்க வேண்டும் என்று விரைவாக விசாரித்தார்.
கடந்த 10 -ம் திகதி நீதிபதி சந்திரசூட்டிற்கு கடைசி பணி நாள் என்பதால் தீர்ப்பை வழங்கினார். அந்த தீர்ப்பில், "கோமா நிலையில் இருக்கும் மகனை வீட்டில் வைத்து பெற்றோர்கள் கவனித்து வருகின்றனர். மகனின் மருத்துவச் செலவுக்கு அவர்களிடம் போதிய நிதி வசதி இல்லை.
இதனால், ஹரிஷின் மருத்துவச் செலவு முழுவதையும் உத்தர பிரதேச அரசே ஏற்க வேண்டும். அவருக்கு வீட்டில் வைத்தே சிகிச்சையளிக்க வேண்டும். அப்போது, அவருடைய உடல்நிலை மோசமானால் நொய்டாவில் உள்ள அரசு மருத்துவனையில் சேர்த்து சிகிச்சையளிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |