அல்லு அர்ஜுன் வழக்கு விவகாரம் குறித்து பதிலளித்த பவன் கல்யாண்
நடிகர் அல்லு அர்ஜுன் வழக்கு குறித்த கேள்விக்கு ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பதில் அளித்துள்ளார்.
பவன் கல்யாண் பதில்
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5-ம் திகதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சி டிசம்பர் 4 -ம் திகதி இரவு ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் வெளியான போது மக்கள் கூட்டம் அலைமோதியது.
அங்கு, அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், 35 வயதுடைய பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தார். அவரது மகன் மூளைச்சாவடைந்திருந்த நிலையில் நினைவு திரும்பியுள்ளார்.
இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைதாகி ஜாமினில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேசுகையில், "சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது. பொதுமக்களின் பாதுகாப்பை வைத்து காவல்துறையினர் செயல்படுகின்றனர்.
இருந்தாலும், தியேட்டர் ஊழியர்கள் சூழ்நிலை குறித்து முன்னதாகவே அல்லு அர்ஜுனிடம் தெரிவித்திருக்க வேண்டும். அவர், இருக்கையில் அமர்ந்ததும், நெரிசலை கட்டுப்படுத்துவது என்பது கடினமான விடயமாக மாறிவிட்டது.
இந்த விவகாரத்தில் திரைக்கு முன்னோ அல்லது பின்னோ என்ன நடந்தது என்பது எனக்கு முழுமையாக தெரியாது. என்னுடைய பொறுப்பு என்பது சட்டத்தை நிலை நாட்டுவது தான்.
எனது சகோதரர் சிரஞ்சீவி படம் பார்க்க செல்கையில் இந்த மாதிரியான சம்பவங்களை தவிர்ப்பதற்கு மாஸ்க் அணிந்து செல்வார்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |