இருவரை குத்திக் கொலை செய்த இளைஞர்... பெருந்தொகை அளித்து ஊக்கப்படுத்திய ஜனாதிபதி: வெளியான பின்னணி
இஸ்ரேலிய நாட்டவர்கள் இருவரை கத்தியால் தாக்கி கொலை செய்த பாலஸ்தீனிய இளைஞரின் குடும்பத்திற்கு பெருந்தொகையை இழப்பீடாக வழங்கியுள்ளார் அந்த நாட்டின் ஜனாதிபதி.
சமீபத்தில் நடந்த இஸ்ரேல் காசா மோதலால் ஏற்பட்ட சேதங்களுக்காக அமெரிக்கா 112 மில்லியன் டொலர் உதவித்தொகை வழங்கிய நிலையிலேயே பாலஸ்தீனிய ஜனாதிபதி Mahmoud Abbas குறித்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.
Al-Halabi என்பவர் 2015ல் இஸ்ரேலிய நாட்டவர்கள் இருவரை கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார். இச்சம்பவத்தை அடுத்து இஸ்ரேலிய பொலிசாரால் Al-Halabi சுட்டுக்கொல்லப்பட்டார்.
மட்டுமின்றி, அவரது குடியிருப்பானது இஸ்ரேலிய ராணுவத்தால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பொதுவாக, இஸ்ரேலியர்களுக்கு எதிராக அரசியல் ரீதியான தாக்குதல்களை முன்னெடுப்பவர்களுக்கும், அதனால் கொல்லப்படுபவர்களுக்கும் பாலஸ்தீனிய நிர்வாகம் குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக வழங்கி வருகிறது.
அந்த வகையில் தற்போது Al-Halabi என்பவரது குடும்பத்தினருக்கு 42,000 டொலர் இழப்பீடாக வழங்கியுள்ளனர். இந்த தொகையானது மாகாண ஆளுநரால் குறிப்பிட்ட குடும்பத்திற்கு நேரிடையாக அளிக்கப்பட உள்ளது.
இஸ்ரேல்- காசா பகுதி மோதலில் இஸ்ரேலிய ராணுவம் நூற்றுக்கணக்கான முறை வான் தாக்குதலில் ஈடுபட்டது. பதிலுக்கு ஹமாஸ் தரப்பில் 4,000 ரொக்கெட்டுகள் வீசப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
11 நாட்கள் நீடித்த இந்த தாக்குதலில் காசா முனையில் மட்டும் 67 சிறார்கள் மற்றும் 39 பெண்கள் உட்பட 254 பேர் கொல்லப்பட்டனர். ஹமாஸ் தரப்பில் 80 போராளிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதேவேளை இஸ்ரேலில் இரு சிறார்கள் உட்பட பொதுமக்களில் 12 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.