சவுக்கால் அடிபட்டு இரத்தம் சொட்டச் சொட்ட பெண்களும் குழந்தைகளும்... சுயரூபத்தைக் காட்டத் தொடங்கிய தாலிபான்கள்!
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ள நிலையில், தாங்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல் இருக்கமாட்டோம், பெண்களுக்கு சம உரிமை கொடுப்போம் என்றெல்லாம் நேற்று பேட்டியளித்தார் தாலிபான்களின் செய்தித்தொடர்பாளர் ஒருவர்.
ஆனால், அவர் அளித்த வாக்குறுதி எல்லாம் சிறிது நேரத்திலேயே காற்றில் போய்விட்டது. நேற்றே பெண்களும் குழந்தைகளும் சவுக்கால் அடிபட்டு இரத்தம் சொட்டச் சொட்ட விழுந்து கிடப்பதைக் காட்டும் படங்கள் வெளியாகி அவர்களது எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
காபூலை தாலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, நேற்று ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்தார் செய்தித்தொடர்பாளரான Zabihullah Mujahid.
தாலிபான்கள் 20 ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல இப்போது இருக்க மாட்டோம், அப்போது பெண்கள் பொது இடங்களில் சவுக்காலடிக்கப்பட்டார்கள், மக்கள் முன்னிலையில் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள், அவர்களுக்கு அலுவலக வேலையும், மருத்துவ உதவியும், கல்வியும் மறுக்கப்பட்டது, வயதான ஒரு ஆண் உதவியின்றி பெண்கள் வீட்டை விட்டு வெளியே போக தடை விதிக்கப்பட்டிருந்தது.
இனி அப்படி இருக்காது, சொல்லப்போனால் இனி பெண்கள் hijab அணிந்தால் போதும், burka கூட அணியத்தேவையில்லை. ஷாரியா சட்டத்தின் கீழ் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள உரிமைகள் வழங்கப்படும். அவர்கள் எங்கள் தோளோடு தோளாக நின்று பணியாற்றப்போகிறார்கள், அவர்களுக்கு பாரபட்சம் காட்டப்படாது என சர்வதேச சமுதாயத்துக்கு உறுதி அளிக்கிறோம் என்றெல்லாம் கூறினார் Mujahid.
ஆனால், அன்றே, காபூல் விமான நிலயத்திற்குள் நுழைய முற்பட்ட பெண்களையும் குழந்தைகளையும் சவுக்கு மற்றும் கூர்மையான ஆயுதங்கள் கொண்டு அவர்கள் தாக்கியதில், இரத்தம் சொட்டச் சொட்ட குழந்தைகள் கதறியழுது கொண்டு நிற்பதையும், பெண்கள் விழுந்து கிடப்பதையும் காட்டும் படங்கள் வெளியாகி, தாலிபான்கள் சொன்னது வேறு செய்வது வேறு என நிரூபித்துள்ளன.
இதுபோக, முன்பு அரசாங்க ஊழியர்களாக இருந்தவர்கள், ஆப்கன் இராணுவத்துடன் பணியாற்றியவர்கள் ஆகியோரை தாலிபான்கள் வீடு வீடாகச் சென்று சுற்றி வளைத்து பிடித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், 12 முதல் 45 வயது வரையுள்ள பெண்கள், திருமணமாகாத பெண்கள், விதவைகள் ஆகியோரை பாலியல் அடிமைகளாக அல்லது தாலிபான்களுக்கு மனைவிகளாக ஆக்கிக்கொள்வதற்காக வீடு வீடாகச் சென்று வேட்டையாடத்துவங்கியுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆக, தாலிபான்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பது ஒரே நாளில் தெரியவந்துள்ளதால், ஆப்கானிஸ்தான் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகத்தான் உள்ளது!