காலாவதியான உணவை யாராவது சாப்பிடுவார்களா என்று கேட்ட மக்கள்... உலக நாடுகள் பலவற்றின் இன்றைய பரிதாப நிலை
காலாவதியான உணவைப்போய் யாராவது சாப்பிடுவார்களா என மக்கள் கேட்ட காலமெல்லாம் போய், இப்போது உணவு என்று ஒன்று இருந்தால் போதும் என்ற ஒரு நிலை உலக நாடுகள் பலவற்றில் உருவாகி வருகிறது.
ஒரு பக்கம் கொரோனா காலகட்டம் ஏற்படுத்திய பாதிப்பு, உக்ரைன் போரால் ஏற்பட்ட விலைவாசி உயர்வு இன்னொரு பக்கம், சில நாடுகளில் காணப்படும் வெள்ளம் ஒரு பக்கம், வறட்சி மறுபக்கம் என, பல்வேறு பாதிப்புகள் சிங்கப்பூரிலிருந்து சிட்னி வரை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.
இலங்கையில் உணவுப்பொருட்களின் விலைவாசி மற்றும் பெட்ரோல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து அறிந்திருப்போம்.
இலங்கை என்று இல்லை, அவுஸ்திரேலியா மக்களும் கூட இந்த விலைவாசி உயர்வு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
பிபிசி ஊடகம் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் இந்த விலைவாசி உயர்வு பல்வேறு நாடுகளிலுள்ள மக்களை எப்படி பாதித்துள்ளது என்பது குறித்துக் காணமுடிகிறது.
கொரியாவில், வீட்டில் மீதமிருக்கும் பொருட்களைக் கொண்டு உணவு தயாரிப்பது எப்படி என்ற விடயம் பிரபலமாகியுள்ளதாம்.
சிங்கப்பூரில், காலாவதி திகதி தாண்டிவிட்ட, மற்றும் சற்றே பாதிக்கப்பட்ட, ஆனால், உண்ணும் நிலையிலுள்ள உணவுப்பொருட்களை மக்கள் வாங்கி உண்ணத் துவங்கியுள்ளார்களாம். சில ஆண்டுகளுக்கு முன் வரை விலையையெல்லாம் பொருட்படுத்தாமல் தரமான பொருட்களை வாங்கி உண்ட மக்கள், இன்று எங்கு விலை குறைவான பொருட்கள் கிடைக்கும் என பல்பொருள் அங்காடிகளில் தேடத்துவங்கியிருக்கிறார்கள்.
அவுஸ்திரேலியாவில், மக்கள் வெளியே சாப்பிடுவதைக் குறைத்துக்கொண்டு வீடுகளிலேயே சமைக்கவும், விலை குறைந்த பொருட்களை வாங்கவும் துவங்கியுள்ளார்களாம். மக்கள் நிலைமை மட்டும் இப்படி இல்லையாம். புகழ் பெற்ற கேஎஃப்சி நிறுவனம், பர்கர்கள், சாலடுகள் மற்றும் சாண்ட்விச்களில் பயன்படுத்தப்படும் லெட்டூஸ் என்னும் இலைகளுக்குப் பதிலாக முட்டைகோஸை பயன்படுத்தத் துவங்கியுள்ளதாம்.
ஒரு காலத்தில் எத்தனையோ நாடுகள் உணவுப்பொருட்களை வீணாக குப்பையில் கொட்டிக்கொண்டிருந்ததைக் குறித்தெல்லாம் கேள்விப்பட்டுவிட்டு, இப்போது இந்த செய்தியைக் கேட்க கொஞ்சம் பயமாகத்தான் உள்ளது!