மாரடைப்பால் உயிரிழந்த நபர்.., வேகத்தடையில் செல்லும்போது உயிர் பிழைத்த அதிசயம்
மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறிய நபர், ஆம்புலன்சில் செல்லும்போது வேகத்தடையால் உயிர் பிழைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உயிர் பிழைத்த நபர்
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, கோலாப்பூர் மாவட்டத்தில் கசாபா-பவடா பகுதியைச் சேர்ந்தவர் பாண்டுரங் உல்பே (65). இவருக்கு கடந்த டிசம்பர் 16-ம் திகதி அன்று மாரடைப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் பாண்டுரங் உல்பே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்தனர். இதனால் அவரது குடும்பத்தினர் சோகமடைந்தனர்.
பின்னர், அவரது உடலை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டனர். மேலும், அவருக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக வீட்டில் ஏற்பாடுகளும் நடைபெற்றன.
இதனிடையே, வீட்டுக்குச் செல்லும் வழியில் வேகத்தடை ஒன்றில் ஆம்புலன்ஸ் ஏறி இறங்கியது. அப்போது உல்பேவின் கை விரல்கள் அசைந்ததால் அவருக்கு உயிர் இருக்கிறது என்று குடும்பத்தினர் நம்பினர்.
பின்னர், அவரை வேறு மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அங்கு அவர் 2 வாரம் வரை தங்க வைக்கப்பட்டார்.
தற்போது அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதில் குணமடைந்து உடல்நலம் தேறியுள்ளார்.
இந்நிலையில், உல்பே சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இதனால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |