இந்த கொரோனா தடுப்பூசியால் எந்த பக்கவிளைவுகள் இல்லை! 12-15 வயதுகுட்பட்டவர்கள் போட்டுக் கொள்ளலாம்: ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி
பன்னிரெண்டு முதல் பதினைந்துக்குட்பட்டவர்களுக்கு பைஸர் நிறுவனத்தின் தடுப்பூசியை பயன்படுத்தி கொள்ளலாம் என்று ஐரோப்பிய யூனியன் அனுமதி வழங்கியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு பரவலாக இருந்தாலும், ஆரம்பத்தில் ஐரோப்பிய நாடுகள் தான் இந்த கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதனால், அங்கு லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளதால், அதைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக தடுப்பூசி போடப்பட்டது. அதன் படி ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலும் கொரோனாவிற்கான முதல் தடுப்பூசியை செலுத்திவிட்டு, இரண்டாவது தடுப்பூசியை போட்டு வருகிறது.
இதன் பயனாக ஐரோப்பிய நாடுகளில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பும் குறைந்து வருகிறது. ஆனால், குழந்தைகளுக்கு எந்த வகை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்பதில் பெற்றோர் பலருக்கும் கேள்வியும், ஒரு வித அச்சமும் எழுந்து வருகிறது.
இந்நிலையில், பன்னிரெண்டு முதல் பதினைந்துக்குட்பட்டவர்களுக்கு Pfizer நிறுவனத்தின் தடுப்பூசியை பயன்படுத்தி கொள்ளலாம் என்று ஐரோப்பிய யூனியன் அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஐரோப்பிய யூனியனின் மருத்துவ அமைப்புத் தலைவர் மார்கோ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், Pfizer தடுப்பூசி செலுத்துவதால் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு எந்தப் பின்விளைவுகளும் ஏற்படவில்லை.
எனவே Pfizer கொரோனா தடுப்பூசியை 12 முதல் 15 வயதினருக்குச் செலுத்த நாங்கள் அனுமதி அளிக்கிறோம் என்று கூறியுள்ளார்.
இந்த மாதத் தொடக்கத்தில், அமெரிக்காவின் மத்திய நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, Pfizer நிறுவனத் தடுப்பூசியை 12 முதல் 15 வயதுள்ள பிரிவினருக்குப் பயன்படுத்த அனுமதி அளித்தது. அதே போல் கனடாவும் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.