சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடி... முன்னாள் ஜனாதிபதி ஒருவர் விமான நிலையத்தில் கைது
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வேண்டுகோளின் பேரில், பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
ஆயிரக்கணக்கானோர்
பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருட்களுக்கு எதிரான மிகக் கொடூரமான நடவடிக்கைகள் காரணமாக ஆயிரக்கணக்கான சட்டவிரோத கொலைகள் குறித்த விசாரணையின் ஒருபகுதியாக இந்த கைது நடந்துள்ளது.
மணிலாவின் பிரதான விமான நிலையத்திற்கு வந்தபோது டுடெர்ட்டேவுக்கு இன்டர்போல் கைதாணை சமர்ப்பிக்கப்பட்டது, தற்போது அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியரின் அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
2016ல் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ரோட்ரிகோ டுடெர்டே நாட்டில் உள்ள மொத்த போதைப்பொருள் கும்பலையும் வேட்டயாட இருப்பதாக அறிவித்தார். இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
தமது நடவடிக்கைகளை ஆதரித்து வந்துள்ள ரோட்ரிகோ டுடெர்டே, கொலை செய்ய மட்டும் உத்தரவிடவில்லை என்றும், ஆனால் தற்காப்புக்காக கொல்வதில் தப்பில்லை என பொலிசாருக்கு கூறியுள்ளதையும் குறிப்பிட்டிருந்தார்.
பல மடங்காக இருக்கலாம்
மட்டுமின்றி, கடும் அழுத்தம் காரணமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உறுப்பு நாடுகளில் இருந்தும் வெளியேறினார். மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஐ.சி.சி.யின் விசாரணைக்கு ஒத்துழைக்க பிலிப்பைன்ஸ் கடந்த ஆண்டு வரை மறுத்து வந்தது.
பொலிசார் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது 6,200 சந்தேக நபர்கள் கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது. உண்மையான எண்ணிக்கை பல மடங்காக இருக்கலாம் என்றே சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
டுடெர்ட்டேவின் கூட்டாளியும் முன்னாள் சட்ட ஆலோசகருமான சால்வடார் பனெலோ இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில், கைது சட்டவிரோதமானது என்றும், முன்னாள் ஜனாதிபதியின் சட்டப்பூர்வ பிரதிநிதித்துவத்தை பொலிசார் ஏற்கனவே மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |