மியான்மரில் ராணுவத்தின் துப்பாக்கி குண்டுக்கு பலியான சிறுமியின் புகைப்படம் வெளியானது
மியான்மரில் ராணுவத்தினரைக் கண்டு பயந்து தந்தையிடம் ஓடிச் சென்ற 7 வயது சிறுமி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை நடந்த இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய சிறுமியின் பெயர் Khin Myo Chit என தெரிய வந்துள்ள நிலையில், தற்போது அவரின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே, நடந்த சம்பவத்தை தம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை எனவும், மிகுந்த வருத்தமுடன் இருப்பதாகவும் சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.
கடந்த மாத இராணுவ ஆட்சி மாற்றத்திற்கு எதிரான ஒடுக்குமுறையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் இவர் மிகவும் இளையவர் என கூறப்படுகிறது.
இதனிடையே, மொத்தம் 164 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாக இராணுவம் கூறுகிறது, ஆனால் மனித உரிமை குழுக்கள் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக கூறுகின்றன.
மட்டுமின்றி, மியான்மர் இராணுவத்தின் ஒடுக்குமுறையால் இதுவரை 20 சிறார்கள் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 11 வயது சிறுமி உட்பட குறைந்தது 17 குழந்தைகள் தன்னிச்சையான தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் குழு கூறியுள்ளது.
திங்கட்கிழமை இராணுவம் முன்னெடுத்த துப்பாக்கி சூடில் 14 வயது சிறுவன், துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.
ஆனால், நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மைக்கு முக்கிய காரணம் ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மட்டுமே என குற்றஞ்சாட்டியுள்ள ஆளும் ஆட்சிக்குழு, அவர்களே தீ வைப்பு சம்பவங்களிலும் வன்முறையிலும் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, 13 மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் 60 க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் பாதுகாப்புப் படையினர் ஆக்கிரமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, ராணுவத்தின் துப்பாக்கி குண்டுக்கு இலக்கான சிறுமி Khin Myo Chit ஒரு முஸ்லீம் கல்லறையில் புதன்கிழமை ஒரு சில நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பில் ராணுவம் இதுவரை கருத்து கூறவில்லை என்றே தெரிய வந்துள்ளது.


