293 பேர் பலி! தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - முதல்வர் பினராயி விஜயன்
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பலியானோர் எண்ணிக்கை 293
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் தற்போது பலியானோர் எண்ணிக்கை 293 ஆக உயர்ந்துள்ளது.
ராணுவம், விமானப்படை, கடற்படையினர், தேசிய பேரிடர் மீட்புக்குழு என பல்வேறு பிரிவு படைகள் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்
இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொண்ட அனைத்து கட்சிக் கூட்டம் நடந்தது.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினராயி விஜயன், "வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யும்வரை முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள். முண்டக்கை பகுதியில் உயிருடன் இருந்த அனைவரும் மீட்கப்பட்டு விட்டனர்.
மாயமானவர்களை மட்டும் தேடி வருகிறோம். நிலச்சரிவினால் பாதிக்கப்ட்டவர்கள், பெண்கள், சிறார்கள், உறவினர்களை இழந்தவர்களுக்கு மனநல ஆலோசனை அளிக்கப்படும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு முகாம்களில் இருக்கக்கூடும்.
முகாம்களில் இருப்பவர்கள், தங்கள் குடும்பத்தினரை காணவில்லை என தேடிப்போக வேண்டாம். பட்டியல் தாருங்கள். நாங்கள் கண்டுபிடித்து தருகிறோம்.
சூழ்நிலை சரியில்லாததால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வருவோர் நேரடியாக வயநாடு வர வேண்டாம். இந்த பேரழிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |