ரஷ்ய தூதரகத்தை இழுத்து மூடிவிட்டு இராணுவத்தைக் களமிறக்கிய ஐரோப்பிய நாடு
போலந்தில் செயல்பட்டுவந்த கடைசி ரஷ்ய தூதரகத்தையும் மூடிவிட்டு, உள்கட்டமைப்பைப் பாதுகாக்க ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களையும் அந்த நாடு களமிறக்கியுள்ளது.
கடைசி ரஷ்ய தூதரகம்
போலந்தில் ரயில் சேவையை முடக்கும் வகையில் நடந்த ரஷ்யாவின் சதித்திட்டத்தை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் எல்லையுடன் இணைக்கும் வார்சா-லப்ளின் ரயில் பாதையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் கைதான இருவர் உக்ரைன் நாட்டவர்கள் என்பதுடன், அவர்கள் ரஷ்யாவிற்காக பணியாற்றியதும் விசாரணையில் அம்பலமானது. இந்த நிலையிலேயே, போலந்தில் செயல்பட்டுவரும் கடைசி ரஷ்ய தூதரகத்தையும் மூட முடிவு செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் Radoslaw Sikorski செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதி செய்துள்ளார்.
ஏற்கனவே Krakow மற்றும் Poznan பகுதிகளில் செயல்பட்டு வந்த ரஷ்ய தூதரகங்களும், அந்த நாட்டின் சதித்திட்டங்களால் மூடப்பட்டது. தற்போது Gdansk பகுதியில் அமைந்துள்ள, போலந்தில் செயல்படும் கடைசி ரஷ்ய தூதரகவும் மூடப்படுகிறது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கை ஒரு சதிச் செயல் மட்டுமல்ல, அரச பயங்கரவாதவும் கூட என Sikorski நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், போலந்து சம்பவத்தில் தங்களுக்கு தொடர்பில்லை என்றே ரஷ்யா மறுத்துள்ளது.
மட்டுமின்றி, ரஷ்யா என்றாலே போலந்துக்கு பதட்டம் ஏற்பட்டுவிடுகிறது என்றும் கேலி செய்துள்ளது. அத்துடன் ரஷ்யாவில் போலந்தின் தூதரக உறவுகளைக் கட்டுப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, 25 நாடுகளைக் கொண்ட ஷெங்கன் இலவசப் பயணப் பகுதியில் ரஷ்ய தூதர்களின் பயணத்தைக் கட்டுப்படுத்துமாறு மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைக் கோர இருப்பதாகவும் அமைச்சர் Sikorski தெரிவித்துள்ளார்.
10,000 வீரர்கள்
2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து போலந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் தீ வைப்பு, சதிவேலை மற்றும் சைபர் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ரஷ்ய தூதரகத்தை மூடுவதுடன், 10,000 வீரர்கள் கொண்ட ஒரு குழுவை களமிறக்கி, நாட்டின் மிக முக்கியமான உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்க முடிவு செய்துள்ளதாக போலந்தின் பாதுகாப்பு அமைச்சர் Wladyslaw Kosiniak-Kamysz தெரிவித்துள்ளார்.

மேலும், வரவிருக்கும் நீண்ட குளிர்காலமும் கிறிஸ்துமஸ் விடுமுறையும் போலந்தின் எதிரிகளால் நாசவேலைக்கு ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதப்படலாம் என இராணுவத் தலைவர் Wieslaw Kukula எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மட்டுமின்றி, சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளைப் பற்றி குடிமக்கள் புகாரளிக்க சிறப்பு செயலி ஒன்றை வெளியிடவும் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |