புடின் அணுகுண்டு வீசுவதை மோடி தடுத்தாரா? போலந்து அமைச்சர் சொன்ன தகவல்
புடின் அணு ஆயுதம் பயன்படுத்துவதை மோடி தடுத்தார் என போலந்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புடின் அணுஆயுத பயன்பாட்டை தடுத்த மோடி
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள போலந்து துணை வெளியுறவு அமைச்சர் விளாடிஸ்லாவ் பார்டோசெவ்ஸ்கி, இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகளை சந்தித்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மற்றும் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு எதிராக ரஷ்யாவை இணங்க வைப்பதில் பிரதமர் மோடி முக்கிய பங்கு வகித்தார் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "நரேந்திர மோடி மிகவும் பிரபலமான மற்றும் மதிக்கப்படும் ஒரு உலகத்தரம் வாய்ந்த தலைவர். மேலும், இந்தியாவுக்கு ரஷ்ய கூட்டமைப்புடனும், அதற்கு முன்பாக சோவியத் யூனியனுடனும் அணிசேரா நாடாக நீண்டகால உறவு இருந்து வருகிறது.
போரின்போது தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாம் என ரஷ்யாவை இணங்க வைப்பதில், 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிரதமர் மோடி பங்கு வகித்தார்.
மோடி தன்னிடம் கூறுவதை ரஷ்ய ஜனாதிபதி புடின் உண்மையில் கவனத்தில் கொள்கிறார். புடின் மீது உண்மையில் அழுத்தம் கொடுக்கவும் செல்வாக்கு செலுத்தவும் கூடிய ஒரு சிலரில் பிரதமர் மோடியும் ஒருவர்.

மோடி மட்டுமல்ல, சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் உட்பட அனைவரும் பதற்றத்தை அதிகரிப்பதற்கு எதிராக உள்ளனர். குறிப்பாக, ரஷ்யாவிற்கு விரோதமானவையாகக் கருதப்படாத நாடுகளில் இருந்து இது வரும்போது, அது முக்கியமானதாகிறது. இதில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது" என பேசியுள்ளார்.
2022 ஆம் ஆண்டு முதல் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரில் இரு தரப்பிலும் சுமார் 50,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |