என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள்
ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும் போர் தொடங்கியதில் இருந்தே, அரசியல் தொடர்பான மரணதண்டனைகள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
2,159 மரணதண்டனை
பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து, குறைந்தது 32 அரசியல் கைதிகள் தூக்கிலிடப்பட்டதை உறுதி செய்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள தகவலில், 2025-ஆம் ஆண்டு முழுவதும் அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகளின் பேரில் 45 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருப்பது, முந்தைய ஆண்டை விட ஏற்பட்ட ஒரு மோசமான அதிகரிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் எதிர்ப்புகளை ஒடுக்குவதற்காக மரண தண்டனை அதிகரித்து வரும் வகையில் பயன்படுத்தப்பட்டு வருவதாக ஐ.நா-வின் மனித உரிமைகள் அலுவலகம் ஈரானை எச்சரித்துள்ளது.
இந்த ஆண்டில் கொல்லப்பட்டவர்களில் பலர், இஸ்ரேல் அல்லது அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ-வுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்; அதேவேளையில், சிலர் நாடு கடத்தப்பட்ட எதிர்க்கட்சிக் குழு ஒன்றுடன் தொடர்புகொண்டிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.
இந்த ஆண்டின் ஜனவரி மாதம் நடைபெற்ற போராட்டங்களுடன் தொடர்புடையவர்களாக, அவர்களில் பதினான்கு பேர் கைது செய்யப்பட்டனர்; அந்த போராட்டங்கள், ஆயிரக்கணக்கானோரின் இறப்புக்கு வழிவகுக்கும் வகையில், மிக மோசமான வன்முறையைக் கொண்டு ஒடுக்கப்பட்டது.
அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், கடந்த ஆண்டு ஈரான் 2,159 மரணதண்டனைகளை நிறைவேற்றியது - இது 1989-ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

இவற்றில் பெரும்பாலானவை போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் அல்லது கொலைகளுக்காக நிறைவேற்றப்பட்டவை என்றும் அந்த அமைப்பு கூறுகிறது. இந்த ஆண்டில் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என்று ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
மேற்கு ஈரானில் ஒரோமியே மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த மெஹ்ராப் அப்துல்லாஜாதே என்பவர் பதிவு செய்த ஒரு ஒலித்துணுக்கு குர்திஸ்தான் மனித உரிமைகள் அமைப்பிடம் சிக்கியது.
எவையுமே உண்மையல்ல
அதில் அவர், ஓரோமியே மத்தியச் சிறையிலிருந்து என் குரலை நீங்கள் கேட்கிறீர்கள்; இதுவே நீங்கள் என் குரலைக் கேட்கும் கடைசி முறையாகவும் இருக்கலாம் என பதிவு செய்திருந்தார்.

மேலும், நான் கைது செய்யப்பட்ட முதல் நாளிலிருந்தே, சித்திரவதை மற்றும் மிரட்டல்கள் மூலம் அவர்கள் என்னிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்; அந்த வாக்குமூலங்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை.
என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எவையுமே உண்மையல்ல. அது அவர்களுக்குத் தெரியும்; கடவுளுக்கும் தெரியும். நான் நிரபராதி எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மரணதண்டனை விதிக்கப்பட்ட மெஹ்ராப் கடந்த 2022ல் பொலிஸ் காவலில் இளம் பெண்ணான மஹ்சா அமினி மரணமடைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற நாடு தழுவிய போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டார்.
ஈரானின் பசிஜ் போராளிக் குழுவின் உறுப்பினர் ஒருவரைக் கொன்றதில் தொடர்பு இருந்ததாக மெஹ்ராப் மீது குற்றம் சாட்டப்பட்டது. 42 மாத கால அச்சத்திற்கும் உறக்கமற்ற இரவுகளுக்கும் பிறகு, இம்மாதத் தொடக்கத்தில் அவர் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |