கொரோனா எங்கிருந்து உருவானது? அமெரிக்கா- சீனா இடையே முற்றும் மோதல்
கொரோனா தோற்றம் குறித்து அறிக்கை வெளியிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்ததை சீனா சாடியுள்ளது.
கொரோனா உருவானது குறித்து விசாரிக்க வுஹான் பயணித்த உலக சுகாதார அமைப்பு குழு, வுஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என கடந்த மார்ச் மாதம் அறிக்கை வெளியிட்டது.
எனினும், இன்னும் கண்டறியப்பட்டாத ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்க தெரிவித்துள்ளது. மேலும், பல அமெரிக்க அரசியல்வாதிகள் கொரோனா உருவானது தொடர்பான விசாரணை தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்காவின் பிரபல ஊடகமான WSJ வெளியிட்ட அறிக்கையில், கடந்த நவம்பர் 2019 வுஹான் ஆய்வகத்தில் பயணியாற்றிய 3 ஆய்வாளர்கள் கொரோனா அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக உளவுத்துறை தரவை மேற்கோள் காட்டி அறிக்கை வெளியிட்டது.
இதனைத்தொடர்ந்து, கொரோனா தோற்றும் குறித்த முழு அறிக்கையை விரைவில் அமெரிக்க வெளியிடவுள்ளதாகவும், இதுகுறித்து கூடுதல் தகவல்களை திரட்ட அமெரிக்க உளவுத்துறைக்கு ஜனாதிபதி பைடன் 90 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியானது.
கொரோனா தோற்றம் குறித்த அமெரிக்க முழு அறிக்கை வெளியிடும் என ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளதை சீனா சாடியுள்ளது.
சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, வைரஸின் தோற்றம் ஒரு கடினமான அறிவியல் கேள்வி. அமெரிக்கா தற்போது புலனாய்வுத்துறையை விஞ்ஞான முடிவுகளை எடுக்க அனுமதி அளித்திருக்கிறது.
இது உண்மையை அறிய அமெரிக்கா ஆர்வம் காட்டவில்லை, எந்தவொரு விஞ்ஞான ஆராய்ச்சியையும் விரும்பவில்லை, இது ஒரு அரசியல் விளையாட்டு, மற்றவர்கள் மீது பழி போட்டு தங்கள் பொறுப்பிலிருந்து விலகும் முயற்சி என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Zhao Lijian சாடியுள்ளார்.