தனக்குப் பிடித்த ரோம் தேவாலயத்திற்குள் நல்லடக்கம் செய்யப்பட்ட பாப்பரசர் பிரான்சிஸ்
செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் முன்னெடுக்கப்பட்ட இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு போப் பிரான்சிஸ் அவருக்குப் பிடித்த ரோம் தேவாலயத்திற்குள் நல்லடக்கம் செய்யப்பட்டதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
சாண்டா மரியா பசிலிக்கா
இத்தாலிய தலைநகரில் உள்ள சாண்டா மரியா மாகியோர் பசிலிக்காவில் உள்ளூர் நேரப்படி மதியம் 1:00 மணிக்கு தொடங்கிய 30 நிமிட ஆராதனைகளின் முடிவில், 88 வயதான பாப்பரசர் பிரான்சிஸ் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில், பாப்பரசரின் சவப்பெட்டியை சிவப்பு மெழுகு முத்திரைகளால் கார்டினல்கள் அடையாளப்படுத்தியது பதிவாகியுள்ளது.
புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்படும் வரையில் வத்திக்கானின் அன்றாட விவகாரங்களை முன்னெடுத்து நடத்தி வரும் கார்டினல் கெவின் ஃபாரெல், பாப்பரசரின் சவப்பெட்டி கல்லறைக்குள் இறக்கப்பட்ட பிறகு, அதன் மீது புனித நீரைத் தெளித்தார்.
அத்துடன், பப்பரசர் பிரான்சிஸ் தனது வாழ்நாளில் அணிந்திருந்த பெக்டோரல் சிலுவையின் மறுஉருவாக்கம் அதன் மேலே தொங்கவிடப்பட்டது. மட்டுமின்றி பாப்பரசர் பிரான்சிஸ் தமது உடலை இந்த கல்லறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இது புனித பிரான்சிஸின் பலிபீடத்திற்கு அருகில் அமைந்துள்ள கல்லறையாகும். மட்டுமின்றி, தமது கல்லறை எளிமையாகவும் அலங்காரமற்றதாகவும் இருக்க வேண்டும் என்றும் பாப்பரசர் பிரான்சிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஏழு பாப்பரசர்களின் கல்லறை
கல்லறையில் லத்தீன் மொழியில் பாப்பரசரின் பெயர் "ஃபிரான்சிஸ்கஸ்" என மட்டுமே எழுதப்பட்டுள்ளது. கன்னி மேரியின் வழிபாட்டிற்கு அர்ப்பணிப்புடன் இருந்த பாப்பரசர் பிரான்சிஸ், வெளிநாட்டுப் பயணங்களுக்குச் செல்லும் முன்பும், பயணம் முடித்து ரோம் திரும்பியதற்கு பிறகும் சாண்டா மரியா மாகியூரில் பிரார்த்தனை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்தப் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று 2023 ஆம் ஆண்டு அவர் தனது விருப்பத்தை அறிவித்திருந்தார். ரோம் நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த பேராலயத்தில் ஏற்கனவே ஏழு பாப்பரசர்களின் கல்லறைகள் உள்ளன.
ஆனால் இங்கு கடைசியாக நல்லடக்கம் செய்யப்பட்டவர் 1669 இல் கிளமென்ட் IX என்ற பாப்பரசராவார். சமீப காலமாக பாப்பரசர்கள் பொதுவாக புனித பீற்றர்ஸ் பேராலயத்தில் அடக்கம் செய்யப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |