12 வயதில் காதல் - போப் பிரான்சிஸ் பாதிரியார் ஆனதன் பின்னணி இதுதான்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ்(pope francis), நேற்று வத்திக்கானில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவிற்கு, உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
போப்பின் காதல் கதை
ஏப்ரல் 26 ஆம் திகதி நடைபெற உள்ள போப்பின் இறுதி சடங்கில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கலந்து கொள்ள உள்ளார்.
அர்ஜென்டினாவில் பிறந்த ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ என்ற பெயர் கொண்ட போப் பிரான்சிஸ், தனது 22 வயதிலே கிறிஸ்துவ மதத்திற்காக சேவையாற்ற தொடங்கினார்.
போப் இளவயதிலே இறைபணியில் ஈடுபட்டதன் பின்னணியில், காதல் கதை உள்ளது தெரிய வந்துள்ளது.
போப், குழந்தைப் பருவத்தில் பியூனஸ் அயர்ஸில் உள்ள மெம்ப்ரில்லர் தெருவில் வசித்து வந்த போது, அங்கு அமலியா டாமோன்டே என்ற தனது அண்டை வீட்டின் பெண் மீது காதல் வயப்பட்டுள்ளார்.
போப் 12 வயதில் அளித்த காதல் கடிதத்தை நினைவு கூர்ந்து, அந்த பெண் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
காதல் கடிதம்
இதில் பேசிய அவர், "அவர் எழுதிய கடிதம் இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. ஒரு காகிதத்தில் வெண்மை நிற வீட்டை வரைந்திருந்தார். அதன் மேற்கூரை சிவப்பு நிறத்தில் இருந்தது.
நம் திருமணத்திற்கு பின்னர், இது நான் உனக்காக வாங்க உள்ள வீடு. நான் உன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால், ஒரு பாதிரியாராகிவிடுவேன் என அந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.
அந்த வயதில் என்னுடைய பெற்றோர் மிகவும் கண்டிப்புடன் இருந்ததால், பிற்காலத்தில் அந்த கடிதம் கவனிக்கப்படாமலேயே போனது. ஒரு பையனிடமிருந்து உனக்கு கடிதம் வருகிறதா? என என் தாய் ஆவேசத்துடன் பேசி என்னை பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட்டார். நாங்கள் இருவரும் சந்திக்காதபடி, என்னை விலக்கியே வைத்திருந்தார்.
நீண்ட காலத்துக்குப் பின்னர் போப்பின் குடும்பம் மெம்பிரில்லர் சாலையில் இருந்து வேறு இடத்திற்கு குடி பெயர்ந்தது. அதே வேளையில், அமலியா டாமோன்டேவுக்கும் திருமணம் நடைபெற்றது.
அப்போது போப்பின் வார்த்தைகள் சிறுபிள்ளைத்தனமாக தெரிந்தாலும், பிற்காலத்தில் தென் அமெரிக்காவிலேயே முதலாவது நபராக போப் பட்டத்தை ஏற்று திறம்பட செயல்பட்டது தன்னை வியப்பில் ஆழ்த்தியதாக நினைவு கூர்ந்துள்ளார்.
12 வயதில், காதலிக்கு கொடுத்த வாக்கின் படியே பாதிரியாராக மாறிய ஜார்ஜ் மரியோ, அதன் பின்னர் 12 ஆண்டுகள் போப் ஆக செயல்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |