கர்ப்பிணி பெண் உட்பட 14 உக்ரைனிய பிணைக்கைதிகள் பரிமாற்றம்: இரினா வெரேஷ்சுக் குற்றச்சாட்டு!
ரஷ்ய ராணுவத்திடம் பிணைகைதிகளாக சிக்கிய கர்ப்பிணி பெண் உட்பட 14 உக்ரைனியர்கள் சனிக்கிழமையான நேற்று உக்ரைனுக்கு திரும்பி இருப்பதாக அந்த நாட்டின் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 24ம் திகதி தொடங்கிய ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையில் மூன்று மாதங்களாக தொடரும் நிலையில், இதுவரை 500க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை ரஷ்ய ராணுவம் பிணைக்கைதிகளாக ரஷ்யாவிற்கு கடத்தியுள்ளது.
இவ்வாறு பிணைக்கைதிகளாக கடத்தப்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களை இருநாட்டு அரசாங்கங்களும் தொடர்ந்து பரிமாறிக் கொண்டு இருக்கும் நிலையில், சனிக்கிழமையான நேற்று கர்ப்பிணி பெண் உட்பட 14 உக்ரைனியர்களை ரஷ்ய ராணுவம் விடுவித்து இருப்பதாக துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெலிகிராம் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ள இரினா வெரேஷ்சுக், ரஷ்யாவுடன் இன்று பிணைக்கைதிகள் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது, இதில் ஏழு இராணுவத்தினர் மற்றும் ஏழு பொதுமக்கள் உட்பட 14 பேர் அவர்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
வீடு திரும்பிய 7 ராணுவ வீரர்களில் ஒருவரான ஐந்து மாத கர்ப்பிணியும் உள்ளடக்கம் என தெரிவித்துள்ளார்.
மேலும் இனிவரும் அனைத்து பிணைக்கைதிகள் பரிமாற்றத்திலும் பெண் கைதிகள் சேர்க்கப்படாமல் இனி இடமாற்றம் மேற்கொள்ளப்படாது என்று உறுதியளித்தார், அத்துடன் பெண்கள் மற்றும் பிற பொதுமக்களை "பணயக்கைதிகளாக" ரஷ்யா பயன்படுத்துவதற்கு துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் கண்டனமும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானிய பிரதமர் மீது குறி... சைபர் தாக்குதலை தீவிரப்படுத்தும் புடின்!
இந்த பிணைக்கைதிகள் பரிமாற்றத்தில் 14 உக்ரைனியர்களுக்கு பதிலாக எத்தனை ரஷ்யர்கள் மாற்றப்பட்டனர் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடதக்கது.