"நான் நாட்டின் ஜனநாயகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டேன்"- ஜனாதிபதியாக நாட்டு மக்களுக்கு முதல் உரை ஆற்றிய அநுர
இலங்கையின் பெரும்பான்மையான மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நாட்டு மக்களுக்காக முதல் உரையை ஆற்றியுள்ளார்.
இலங்கை சோசலிச குடியரசின் புதிய ஜனாதிபதி
இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க மக்களால் தேர்வு செய்யப்பட்டு, சற்று முன்னர் அதிகாரப்பூர்வமாக கொழும்பு காலிமுகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் பதவி பிரமாணம் செய்துக்கொண்டார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் கடந்த சனிக்கிழமை (21) முடிந்த உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இரவு முழுவதும் தொடர்ந்த வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவுகள் நேற்றைய தினம் இரவு 7.30 மணியளவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.
அதனப்படையில், இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பெரும்பான்மையான மக்களால் தேர்வு செய்யப்பட்டார்.
தற்போது இலங்கை சோசலிச குடியரசின் புதிய ஜனாதிபதியாக பதிவி பிரமாணம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றார்.
இந்நிலையில் காலை 10 மணியளவில் நிகழ்ந்த பதவி பிரமாண நிகழ்ச்சியில், நாட்டு மக்களுக்காக இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது முதல் உரையை ஆற்றியுள்ளார்.
ஜனாதிபதியாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் உரை
“நமது நாட்டின் ஜனநாயகத்தின் மிக முக்கியமான அம்சம், நாட்டின் ஆட்சியாளரை பொது மக்களால் தேர்ந்தெடுப்பது தான். ஆனால் ஜனநாயகம் என்பது வெறும் வாக்குகளை அளிப்பதோ அல்லது ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோ அல்ல.
கட்டமைப்புகள் மற்றும் வலுவான சட்டங்களை இன்னும் கொஞ்சம் வலுப்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எனவே, நான் ஜனாதிபதியாக இருக்கும் போது நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான எனது அதிகபட்ச அர்ப்பணிப்பை வெளிப்படுத்தத் தயாராக இருக்கிறேன் என்று முதலில் பொதுமக்களுக்கு உறுதியளிக்கிறேன்."
மேலும் பதவி விலகும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொது மக்களின் ஆணையை இன்பமாக ஏற்று ஜனநாயகத்தை மதித்து அதிகாரத்தை மாற்றுவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியமைக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த புதிய நிறைவேற்று ஜனாதிபதி, “மிகவும் சவாலான ஒரு நாட்டை நாம் கையகப்படுத்துகிறோம் என்பதை ஆழமாக புரிந்து கொண்டுள்ளோம். எங்களிடம் இருந்து பொதுமக்கள் எதிர்பார்க்கும் சாதகமான அரசியல் கலாசாரத்தை நாட்டில் உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதற்காக நாங்கள் அர்பணித்து செயற்பட தயாராக இருக்கிறோம். அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்த எங்கள் தரப்பிலிருந்து சாத்தியமான அனைத்தையும் செய்வோம்" எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நாட்டின் நலனுக்காக சர்வதேச சமூகங்களுடன் இணைந்து செயற்படுவதற்கான தனது எதிர்பார்ப்பு குறித்தும் கருத்து வெளியிட்டார்.
“நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர ஒவ்வொரு குடிமகனின் ஆதரவையும் நான் எதிர்பார்க்கிறேன். ஆனால் அந்த நோக்கத்திற்காக ஜனாதிபதி என்ற வகையில் எனது பொறுப்பை அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவேன் என்று மக்களுக்கு நான் எப்போதும் உறுதியளிக்கிறேன்.
எங்களுக்கு சர்வதேச ஆதரவு தேவை என்பதை நான் அறிவேன். எனவே, அதிகாரப் பிளவுகள் இருந்தாலும் எமது நாட்டுக்கு அதிக நன்மை பயக்கும் வகையில் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றோம்.
நாங்கள் உலகின் மற்ற நாடுகளுடன் இணைந்து முன்னேற வேண்டிய நாடாக இருக்க வேண்டும். அதற்குத் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம்” என்று அவர் கூறினார்.
இறுதியாக, “நான் நாட்டின் ஜனநாயகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்று சொல்ல வேண்டும். மக்கள் எனக்கு வாக்களித்துள்ளனர். எனக்கு வாக்களிக்காதவர்களும் உள்ளனர். எங்களின் வெற்றியின் அளவு குறித்து எங்களுக்கு தெளிவான புரிதல் உள்ளது.
இந்த காலக்கட்டத்திற்குள் எங்கள் மீது நம்பிக்கை இல்லாத பொதுமக்களின் நம்பிக்கையை வளர்ப்பதே எனது பொறுப்பு. அந்த நோக்கத்தில் நான் வெற்றியடைவேன் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று அநுர திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |