வாக்குப்பதிவு முடிந்த அதே நாள்... ஜனாதிபதி வேட்பாளருக்கு நேர்ந்த துயரம்: விமானத்தில் பிரிந்த உயிர்
காங்கோ-பிரஸ்ஸாவில் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த அதே நாளில் முக்கிய எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கொரோனாவால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு தீவிரம் காரணமாக அவரை மருத்துவ விமானம் மூலம் பிரான்ஸ் நாட்டுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 61 வயதான கை-பிரைஸ் பர்ஃபைட் கோலஸ் என்பவரே, தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நாளன்று மரணமடைந்துள்ளார்.
விமானத்தில் இருந்தபடியே, தமது ஆக்ஸிஜன் மாஸ்கை கழட்டி, தாம் செத்துக்கொண்டிருப்பதாக தமது கட்சிக்காரர்களுக்கு அவர் கூறிய அந்த காணொளி காட்சி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
மட்டுமின்றி ஞாயிறு அன்று நடக்கவிருக்கும் வாக்குப்பதிவில் அனைவரும் தவறாமல் கலந்த் கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.
கடந்த 1979 முதல் ஆட்சியில் இருக்கும் தற்போதைய ஜனாதிபதி 77 வயதான Sassou Nguesso என்பவருக்கு எதிராக களம் கண்டுள்ள 6 வேட்பாளர்களில் ஒருவர் இந்த பர்ஃபைட் கோலஸ்.
வெள்ளிக்கிழமையே, தமக்கு மலேரியா என சந்தேகம் இருப்பதாக கூறிய அவரை தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்ப்பித்துள்ளனர். முன்னெடுக்கப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. கடந்த 2016ல் நடந்த தேர்தலில் பர்ஃபைட் கோலஸ் வெறும் 15% வாக்குகள் மட்டுமே பெற்று தற்போதைய ஜனாதிக்கு எதிராக படுதோல்வி அடைந்திருந்தார்.
காங்கோ-பிரஸ்ஸாவில் நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு 130 பேர்கள் இறந்துள்ளதுடன், மொத்தம் 9,000 பேர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.