அரச குடும்பத்தில் தனக்கான மொத்த சொத்தையும் விட்டுக்கொடுத்த இளவரசி: நெகிழ்ச்சி காரணம்
தமது காதலுக்காக அரச குடும்பத்தில் தனக்கான மொத்த சொத்தையும் விட்டுக்கொடுத்திருக்கிறார் ஜப்பான் இளவரசி மகோ. மட்டுமின்றி ஜப்பான் பாரம்பரிய விழாக்கள் ஏதுமின்றி மிக எளிமையாக திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்திருக்கிறார்.
ஜப்பான் பேரசர் நருஹிட்டோவின் மருமகள் மகோ. இவர் அரச குடும்பத்தைச் சாராத கெய் கொமுரோ என்பவரைக் காதலித்து வந்தார். ஜப்பானில் அரசக் குடும்பத்துப் பெண்கள் சாதாரண நபர்களைத் திருமணம் செய்துகொள்ள தடை உள்ளது.
இதனால் கடந்த பல ஆண்டுகளாகவே இவர்களின் திருமணத்துக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், குறித்த ஜோடி பாரம்பரிய முறையில் இல்லாமல், வழக்கமான கொண்டாட்டங்களைத் தவிர்த்து சாமான்யர்களைப் போல் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.
29 வயதான மகோ திருமணம் செய்த பின்னர் இளவரசி என்ற பட்டத்தையும் துறக்கவிருக்கிறார். மேலும், திருமணத்துக்குப் பின்னர் மகோ தமது கணவருடன் அமெரிக்காவுக்கு குடிபெயரவும் திட்டமிட்டுள்ளார்.
ஆனால், கொமுரோவை இன்னும் ஜப்பான் அரச குடும்பம் விசாரணைக்கு உரிய நபராகவே கருதுகிறது என தெரிய வந்துள்ளது. கொமுரோவின் முன்னாள் காதலியிடம் அவரது தாயார் கடன் வாங்கிய விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், கொமுரோ அமெரிக்கா சென்றுவிட்டதுடன் அங்கு சட்டம் பயின்றுவந்தார். மகோவின் தந்தை அகிஷினோ அண்மையில் திருமணத்தை தான் ஆதரிப்பதாகவும் ஆனால் மகோ பொதுமக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
ஆனால், மகோ பல ஆண்டுகள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காதலுக்காக அரச குடும்பத்தின் சொத்தை விட்டுக்கொடுத்துள்ளார். அவர் விட்டுக்கொடுத்த தொகை 137 மில்லியன் யென் அதாவது 1.2 மில்லியன் டொலர் எனக் கூறப்படுகிறது.
மகோவின் சகோதரர் 14 வயதேயான இளவரசர் ஹிசாஹிடோ. இவர் தான் இப்போதைக்கு ஒரே ஆண் வாரிசு. இவர்தான் ஜப்பானின் க்ரைசாந்திமம் அரியணைக்கு உரிமையுள்ளவர் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
ஏற்கெனவே பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது காதல் மனைவி மேகன் மெர்க்கல் அரச வாழ்வைத் துறந்து அமெரிக்காவில் குடியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.