யானையை தொடர்ந்து கலருக்கு வந்த சிக்கல்.., விஜயின் கட்சி கொடிக்கு தொடரும் எதிர்ப்புகள்
தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியில் உள்ள நிறமானது தங்கள் அமைப்பின் கொடியைப் போல் இருப்பதாக புகார் வந்துள்ளது.
கட்சி கொடியில் சர்ச்சை
நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடியையும், கட்சி பாடலையும் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.
கட்சியின் கொடியை அறிமுகம் செய்வதற்கு முன்பாக அனைவரும் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். சிவப்பு, மஞ்சள் நிறப் பின்னணியில் போர் யானைகள் இருபுறமும், வாகை பூ நடுவிலும் உள்ளவாறு கட்சியின் கொடி உள்ளது.
இந்நிலையில், கட்சி கொடி பற்றி பல்வேறு விமர்சனங்களும் எதிர்ப்புகளும் எழுந்தவாறு உள்ளன. அந்தவகையில், தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை தமிழக வெற்றி கழக கொடியில் பயன்படுத்துவது தேர்தல் விதிமுறைக்கு தவறானது என்று சர்ச்சை உருவானது.
அதோடு, கட்சி கொடியில் இருந்து யானை படத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு தொடுக்கப்படும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
நிறத்தில் பிரச்சனை
இந்நிலையில், தனது கட்சி அமைப்பின் கொடியை போல தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடி இருப்பதாக வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் தலைவரான அண்ணா சரவணன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"நடிகர் விஜயின் கட்சிக் கொடியை மாற்ற வேண்டும். கடந்த 2016 ஆம் ஆண்டு, வெள்ளாளர் முன்னேற்ற கழகம் துவக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் வளர்ந்து வரும் எங்கள் கட்சி, முறைப்படி பத்திர பதிவுத்துறையில் இயக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
எங்கள் இயக்கத்தின் கொடியாக, மேலும், கீழும் சிவப்பு வண்ணமும்; நடுவில் மஞ்சள் வண்ணமும் இருக்கும். இதை எங்கள் நிகழ்வுகளில் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கியுள்ளார். சமீபத்தில் கட்சிக்கொடி அறிமுகப்படுத்தினார்.
அது அப்படியே எங்கள் இயக்கத்தின் கொடியாக உள்ளது. இது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். நடிகர் விஜய் கட்சி துவங்கியதற்கும், கொடி அறிமுகம் செய்ததற்கும் இடையே 2 ஆண்டுகள் இடைவெளி இருந்தது. இந்த நேரத்தில், கட்சி கொடி, வண்ணம், சின்னம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.
எத்தனையோ வண்ணங்களும், சின்னங்களும் இருக்கையில், ஏற்கனவே பயன்படுத்தி வருபவற்றை அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. அதனால் கட்சி கொடி வண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
எங்கள் அமைப்பு எட்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த கொடியை பயன்படுத்தி வருகிறோம். விஜய் தன் கட்சி கொடியின் வண்ணத்தை மாற்ற வேண்டும். இல்லையென்றால் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |