ஒலிம்பிக் வீராங்கனைக்கு புகலிடம் அளித்ததற்காக பழிக்குப்பழி... புலம்பெயர்ந்தோரை ஆயுதமாக பயன்படுத்தும் பெலாரஸ்
ஒலிம்பிக் தடகள வீராங்கனைக்கு புகலிடம் அளித்ததற்காக பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கையாக புலம்பெயர்ந்தோரை ஆயுதமாக பயன்படுத்துவதாக பெலாரஸ் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கச் சென்ற பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த Krystsina Tsimanouskaya (24) என்னும் தடகள வீராங்கனை வெளிநாட்டு உளவாளியாக செயல்பட்டதாக குற்றம் சாட்டி, அவரை உடனடியாக நாடு திரும்ப உத்தரவிட்டது பெலாரஸ் நாடு.
ஆனால், நாடு திரும்பினால் தன் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்த Krystsina, போலந்து நாட்டில் புகலிடம் கோர, போலந்து அவருக்கு புகலிடம் அளித்தது.
அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக வித்தியாசமான அணுகுமுறை ஒன்றை மேற்கொண்டுள்ளது பெலாரஸ் நாடு. அதாவது, சட்டவிரோத புலம்பெயர்வோரை போலந்துக்கு அனுப்பி தொல்லை கொடுக்க முயற்சிக்கிறது அந்நாடு வெளிநாடுகளிலிருந்து சட்ட விரோத புலம்பெயர்வோரை கொண்டுவந்து, அவர்களை தனக்கு எதிரான நாடுகளுக்கு அனுப்பி தொல்லை கொடுப்பதை ஒரு போர் யுக்தியாகவே கடைப்பிடிக்கிறார் பெலாரஸ் அதிபரான Alexander Lukashenko.
இப்படியெல்லாம் செய்வார்களா என யோசிக்கலாம். ஆனால், போலந்து மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியமே இப்படி ஒரு குற்றச்சாட்டை Alexander மீது முன்வைத்துள்ளது.
தன்னை விமர்சித்த ஒருவரை கைது செய்வதற்காக, நடுவானில் பயணிகள் விமானம் ஒன்றை கடத்தியதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் Alexander மீது தடைகளை விதித்தது. அதற்கு பழிவாங்குவதற்காக, வெளிநாடுகளிலிருந்து சட்ட விரோத புலம்பெயர்வோரை கொண்டுவந்து, அவர்களை ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் அனுப்பி வருகிறது பெலாரஸ்.
லிதுவேனியா நாடும் இத்தகைய குற்றச்சாட்டு ஒன்றை பெலாரஸ் மீது வைத்துள்ள நிலையில், திடீரென பெலாரஸிலிருந்து லிதுவேனியாவுக்குள் நுழையும் புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
2020இல் வெறும் 81 பேர் லிதுவேனியாவில் புகலிடம் கோரிய நிலையில், அந்த எண்ணிக்கை 2021இல் 4,000 ஆக உயர்ந்துள்ளது, அது 10,000 ஆக உயர வாய்ப்புள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளதிலிருந்து, பெலாரஸின் மோசமான திட்டத்தை புரிந்துகொள்ளலாம்.