மியான்மர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு: மக்கள் ஆவேசம்
மியான்மர் தலைவர் ஆங் சாங் சூ கியை பிடித்துவைத்துக்கொண்டு எதிர்ப்பவர்களை தாக்கிவரும் பொலிசார், எதிர்ப்புப் பேரணி ஒன்றின்போது சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண் ஒருவரின் உடலை தோண்டி எடுத்துள்ள சம்பவத்தால் மக்கள் ஆவேசம் அடைந்துள்ளார்கள்.
மியான்மரில் பொலிசாருக்கு எதிராக போராடி வருபவர்கள் கூட்டத்தில் ஏஞ்சல் என்று அழைக்கப்படும் Deng Jia Xi என்னும் Kyal Sin (19) என்ற ஒரு இளம்பெண்ணும் இருந்தார்.
பொலிசார் சுட்டதில் தலையில் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் மக்களை மேலும் கொந்தளிக்கச்செய்த நிலையில், தங்கள் மீது தவறு இல்லை என்பதை நிரூபிப்பதற்காக, பொலிசார் ஏஞ்சலுடைய உடலை கல்லறையிலிருந்து தோண்டி எடுத்துள்ளார்கள்.
ஒரு நீதிபதி மற்றும் சில மருத்துவர்கள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்ட ஏஞ்சலின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் ஏஞ்சலின் தலையின் பின் பக்கம் காயம் ஒன்றும், அதில் உலோகத் துண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். அந்த உலோகத்துண்டு, பொலிசார் பயன்படுத்தும் துப்பாக்கிக் குண்டில் உள்ளதல்ல என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பொலிசார் போராட்டக்காரர்களை முன் பக்கமிருந்துதான் தாக்கினார்கள் என்றும், ஏஞ்சல் பொலிசாரால் சுடப்பட்டிருந்தால், ஏஞ்சலின் தலையின் முன்பக்கம்தான் காயம் ஏற்பட்டிருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்கள் பொலிசார்.
அந்த பிரேத பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் ஏஞ்சலின் தலையின் பின் பக்கத்தில் காயம் ஏற்பட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவரது மரணத்துக்கு தாங்கள் காரணமல்ல என பொலிசார் கூறுகிறார்கள்.
ஆனால், Reuters பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களில், கொல்லப்படுவதற்கு முன், ஏஞ்சல் பொலிசாருக்கு முதுகு காட்டி நிற்பது தெளிவாக தெரிகிறது. ஆகவே, இந்த விடயம் மேலும் மக்களிடையே கோபத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.


